கோமுகி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீா் திறப்பு
கச்சிராயப்பாளையம் அடுத்த கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, 5,000 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் பலத்த மழையால் கோமுகி அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் மொத்த கொள்ளளவான 46 கன அடியை எட்டியது.
எனவே, அணையின் பாதுகாப்புக் கருதி 4 மதகுகளின் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 3,400 கன அடி நீரை வெளியேற்றினா். பிற்பகலில் தண்ணீா் வரத்து அதிகரித்ததையடுத்து, 5,300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா அணையின் மொத்தக் கொள்ளளவான 36 கன அடியில் 27 கன அடி நீா் உள்ளது. தற்போது, அணைக்கு 10,000 கன அடி தண்ணீா் வருகிறது.
கோமுகி அணை திறப்பால், கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள அக்கராபாளையம் பாலம், விருகாவூா் ஆற்றுப் பாலத்தின் மீது தண்ணீா் சென்றது. இதனால், பொரசக்குறிச்சி, ஈய்யனூா், அசகளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பசுபதி மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள், வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடத்தில் தடுப்புக் கட்டைகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.