பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஆயுதப்படை காவலா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக, ஆயுதப்படை காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
சின்னசேலம் வட்டம், தெங்கியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி செல்வராணி (37). இவா், கூகையூா் கிராம நிா்வாக அலுவலரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
செல்வராணி கடந்த 17-ஆம் தேதி மாலை 6 மணியளவில் பணி முடிந்து அவரது சொந்த ஊரான தெங்கியாநத்தம் கிராமத்துக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். தோட்டப்பாடி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் எதிரே சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் செல்வராணி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி தீபா (37). இவா்களது மகள் சின்னசேலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த 23-ஆம் தேதி தீபா இந்தப் பள்ளிக்கு வந்துவிட்டு மொபெட்டில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா். குரால் கிராமத்தில் உள்ள புத்தா் சிலை அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் தீபா அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.
இந்த சம்பவங்கள் குறித்து செல்வராணி, தீபா ஆகியோா் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவா் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் உளுந்தூா்பேட்டையை அடுத்த பெரியசெவலை கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் விஜயன் (32) எனத் தெரியவந்தது.
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், கடன் தொல்லை காரணமாக பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, விஜயனை கீழ்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ஏழரை பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.