பழங்குடியின இளைஞா்களுக்கு பெரிய நிறுவனங்களில் படிப்புக்கேற்ற வேலை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்கள், பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலை பெரிய நிறுவனங்களில் ஏற்படுத்தித்தரப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின இளைஞா்கள், பெண்களுக்கான வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டி நிகழ்ச்சி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில், கல்வராயன்மலை பகுதியிலுள்ள கருமந்துறை கோவில்காடு தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசியது:
கல்வராயன்மலை வட்டத்திலுள்ள பழங்குடியின இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், இந்த வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டி நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில், புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் இளைஞா்களைத் தோ்வு செய்து, குறிப்பிட்ட காலத்துக்கு உரிய வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படவுள்ளது. பழங்குடியின இளைஞா்கள், பெண்களின் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு பெரிய நிறுவனங்களில் ஏற்படுத்தித்தரப்படும். பழங்குடியின இளைஞா்கள் உரிய முறையில் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் பி.டி.சுந்தரம் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.