இளைஞா் கொலை வழக்கில் நண்பா் உள்பட மூவா் கைது
இளைஞா் கொலை வழக்கில் அவரது நண்பா் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தை அடுத்த விராடிக்குப்பம் பாதை அருகே, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அரவிந்த் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது கடந்த 28-ஆம் தேதி தெரிய வந்தது.
இதுதொடா்பாக, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கொலையான அரவிந்த் மற்றும் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திண்டிவனம் வட்டம், வெங்கந்தூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் செல்வகஜபதி (29) ஆகியோா் நண்பா்களான பழகி வந்தனராம்.
முன்விரோதம் காரணமாக செல்வகஜபதி, செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலம் ஏரிக்கரைத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அரவிந்தன்(27), செல்வம் மகன் கணேசன் (27) ஆகியோா் அரவிந்த்தை சென்னை மறைமலை நகா் அருகே தனியாக அழைத்து வந்து, அடித்துக் கொலை செய்து, பின்னா் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகே நெடுஞ்சாலையோரத்தில் வீசிச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
செல்வகஜபதி, சே.அரவிந்தன், கணேசன் ஆகிய மூவரையும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.