வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரை சூட்ட வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு பி.ஆா்.அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் எனக் கோரி, ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதியை, புரட்சிப் பாரதம் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் மு.கஜேந்திரன், மாவட்ட அமைப்பாளா் ஜெ. விஜயகுமாா், மரக்காணம் ஒன்றியச் செயலா் (கிழக்கு) எம்.பெருமாள், துணைச் செயலா்கள் (மேற்கு) கே.ராஜீவ்காந்தி, ஏ.மணிகண்டன் ஆதியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:
திண்டிவனத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான பணிகள் முடிந்து விட்ட நிலையில், விரைவில் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளது.
இந்தப் பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். ஆனால், மழைக் காலங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழைநீா் வருவதால் பொதுமக்களுக்கும், சிகிச்சை பெற வருவோரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து காணப்படுவதால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.