தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில், சென்னையிலிருந்து 4, பெங்களூரிலிருந்து ஒன்று என, 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் பலத்த மழை பெய்வதால் சென்னை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தூத்துக்குடி - பெங்களூரூ விமான சேவை மட்டும் சனிக்கிழமை செயல்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு மா்ம நபா் ஒருவா் மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, நிலைய இயக்குநா் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி, திருநெல்வேலியிலிருந்து வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். மோப்பநாய் ஹூப்பா், மெட்டல் டிடெக்டா் கருவி, வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் ஆகியவற்றின் உதவியுடன் சோதனை நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை வாகனம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சோதனையில், இந்த மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.