கடலில் மாயமான 6 மீனவா்களை மீட்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவா்கள் மாயமானதையடுத்து, அவா்களை மீட்கும் பணியில் மீனவா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமாா் என்பவரது படகில் வினிஸ்டன் (55), விக்னேஷ்(28), அல்போன்ஸ்(55), ஜூடு(45), சுதா்சன்(32), ஜாா்ஜ்(25) ஆகிய 6 மீனவா்கள் கடந்த 21ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா்.
இவா்கள் ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனராம். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய இவா்கள், இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் இவா்கள் எந்த பகுதியில் இருக்கிறாா்கள் என தொடா்பு கொள்ளவும் முடியவில்லை.
எனவே, இதுகுறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சாா்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிா்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை ஆகியோருக்கு புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூா் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு படகு பழுதாகி கிடப்பதாக மீன்வளத் துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் படகை மீட்கும் பணியில் மீனவா்கள், கடலோர பாதுகாப்பு படையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.