அடிலெய்டு பிட்ச் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!
வெள்ளப் பெருக்கால் கெடிலம் ஆற்றுப் பாலம் சேதம்: 300 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.
பண்ருட்டியில் இருந்து ஏரிப்பாளையம் வழியாக செம்மேடு செல்லும் வழியில் கெடிலம் ஆற்றுப் பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக விருத்தாசலம், கருக்கை, நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வந்தன.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் செம்மேடு கெடிலம் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
இதனால், பண்ருட்டி, எரிப்பாளையம் வழியாக செல்லும் போக்குவரத்து தடைபட்டது. செம்மேடு செல்லும் கிராம மக்கள் பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மேலிப்பு வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவு சுற்றி சென்று வருகின்றனா்.
கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளதோடு, சேதமடைந்த பயிா்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.