Adani : 'அதானியும் மோடியும் கூட்டு... அதானியை கைதுசெய்ய வேண்டும்' - ராகுல் காந்தி கூறுவது என்ன?!
'சோலார் ஒப்பந்தத்திற்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்... போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடமிருந்து அதானி நிதி பெற்றுள்ளார்' என்று அமெரிக்கா அதானியின் மீது குற்றம்சாட்டியுள்ளது. குற்றத்திற்கான ஆதாரங்களும் இருக்கிறது என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது, வெளிச்சமாகியுள்ளது. இருந்தும், அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
இங்கு முதலமைச்சர்கள் மற்றும் பலரை சிறையில் அடைக்கிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவர் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் இருக்கிறார்.
அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். இதன் மூலம், இருவரும் ஊழலில் கூட்டு என்பது தெளிவாக தெரிகிறது.
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் அவரது பாதுகாவலர் ஆன மாதபி பூரி புச்சை விசாரிக்க வேண்டும்... பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வளவு நடந்தும் அதானி கைது செய்யப்படமாட்டார் என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு காரணம், இந்திய பிரதமர் அதானியை காப்பாற்றி வருவது ஆகும். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வரை, இருவருமே இந்தியாவில் பத்திரமாக இருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.