ADMK: டிசம்பர் 15 அதிமுக பொதுக்குழுவா? வரிசைகட்டும் தீர்மானங்கள்; திமுக-வுக்கு எதிராக என்ன ப்ளான்?
அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
அந்தக் கூட்டத்தில், புதுப்பித்த உறுப்பினர் அட்டைகளை வழங்காத நிர்வாகிகளையும், செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தாத மாவட்டச் செயலாளர்களையும் கடுமையாகக் கடிந்து கொண்டார். அ.தி.மு.க-வின் வட்டக் கழகங்கள், சார்பு அமைப்புகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றின் பணிகளை மேம்படுத்தவும், தொண்டர்களுக்குப் புதுப்பித்த உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் கள ஆய்வுக்குழுவையும் அமைத்தார்.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாச்சலம் ஆகியோரை அடக்கிய அந்தக் குழு, ஒவ்வொரு மாவட்டமாகக் கள ஆய்வை நடத்தி வருகிறது. திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை எனத் தொடர்ச்சியாகக் கள ஆய்வுக்கூட்டங்களில் அடிதடி சண்டைக் காட்சிகள் அரங்கேறும் நிலையில், பொதுக்குழு தேதி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், "இந்த ஆண்டுக்கான பொதுக்குழுவை வரும் டிசம்பர் 15-ம் தேதி கூட்டுவதற்கு முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி. அன்றைய தினம் நிறைந்த பௌர்ணமி என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பொதுக்குழுவை நடத்திக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறார். எப்போதும்போல, வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூடவிருக்கிறது. கட்சி விதிப்படி, பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 நாள்கள் முன்னதாகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறுகின்றன. கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனின் பெயரில்தான் அழைப்பிதழ் தயாராகின்றன. பா.ஜ.க., தி.மு.க அரசுகளைக் கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன.
நீட் தேர்வு, நிதிப் பகிர்வு, தமிழக மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிக்கும் வகையில் தீர்மானங்கள் இடம்பெறலாம். அதேபோல, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்தும் தீர்மானம் இடம்பெறும். விவசாயிகள் பிரச்னை, பொய்யான முதலீடு கணக்குகள், பரந்தூர் விமானநிலைய விரிவாக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி தி.மு.க அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் இடம்பெறலாம். தீர்மானங்களைத் தயாரிப்பதற்கான பணிகளில் கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், வைகைச்செல்வன், பொன்னையன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.
வரும் டிசம்பர் 9-ம் தேதி, தமிழக சட்டமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. 'கூட்டத்தொடருக்கு வரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும், வார இறுதியில் ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தியிருக்கிறதாம் அ.தி.மு.க மேலிடம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...