Ajith Kumar: "குறைந்தபட்சம் அவர்களுக்காகவாவது..." - விருது பெற்ற கையோடு பஹல்காம் தாக்குதல் பற்றி AK
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார், நேற்று (ஏப்ரல் 28) டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி கைகளால் `பத்ம பூஷண்' விருது பெற்றார்.
அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

`பத்ம பூஷண்' விருது பெற்ற பிறகு ANI ஊடகத்திடம் பேசிய அஜித் குமார், "பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களிடத்தும் என் இதயம் செல்கிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புகிறேன். அதற்காகப் பிரார்த்தனை செய்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்கிறது என்று நம்புகிறேன். நாம் அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியான சமூகமாக வாழ்வோம்.
ஆயுதப்படையைச் சேர்ந்த பலரை இன்று (ஏப்ரல் 28) நேரில் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்காக நாம் அனைவரும் அவர்களை வணங்குகிறோம். அவர்கள் கடினமாக உழைப்பதால்தான் நாம் நிம்மதியாக உறங்குகிறோம். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வேண்டும்.

நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைக்கிறார்கள். அவர்களின் மரியாதைக்காகவாவது, ஒவ்வொருவரையும், ஒவ்வொருவரின் மதத்தையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் நம் நாட்டுக்குள்ளேயாவது சண்டை வேண்டாம். அமைதியான சமூகமாக நாம் இருப்போம்" என்று கூறினார்.