பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்
"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ பேட்டி
நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம், அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துயது.
இந்தநிலையில், சோகத்தில் மூழ்கியிருந்த அவரது இன்ஸ்டா ஐடி, திடீரென மீண்டும் உயிர்பெற்றுள்ளது. ராகுல் டிக்கி மாதிரியே நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார், ராகுல் டிக்கியின் மனைவி தேவிகாஶ்ரீ.
நேசித்த காதல் கணவர் இளம் வயதிலேயே உயிரிழந்த மன வேதனை, துக்கம், சோகம் என இருந்த தேவிகா அதையெல்லாம் மறந்து ராகுல் டிக்கியைப்போலவே வீடியோ வெளியிட்டு பாராட்டுகளைக் குவித்து வருகிறார். வாழ்த்துகளுடன் தேவிகாவிடம் பேசினேன்.
"ராகுல் உலகத்தோட பார்வையில்தான் உயிரோட இல்லையே தவிர, என்னோட உலகத்துல சிரிச்சி;பேசி வாழ்ந்து வழிநடத்திட்டுத்தான் இருக்கார். உள்ளுக்குள்ள வலியும் வெறுமையும் இருந்தாலும் நகைச்சுவை வீடியோக்கள் பண்றதுக்கு ராகுலோட ஆசீர்வாதம்தான் காரணம். அவரை சப்போர்ட் பண்ணமாதிரியே, அவரோட பத்து லட்சம் ஃபாலோயர்ஸ் எனக்கும் அன்பையும் ஆதரவையும் அன்லிமிடெட்டா கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ராகுல் மாதிரியே நானும் காமெடி வீடியோக்கள் போட ஆரம்பிச்சதும் கூடுதலா ரெண்டு லட்சம் ஃபாலோயர்ஸ் பின்தொடர ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு துணையா இருக்கிற எல்லோருக்கும் அன்பையும் நன்றியையும் தெரிவிச்சுக்கிறேன்!" - என்றபடி நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் தேவிகா.
"ராகுல் எனக்கு இன்ஸ்டா மூலமாதான் அறிமுகம். ஃப்ரெண்ட் ஆகி, அதுக்கப்புறம்தான் லவ் பண்ண ஆரம்பிச்சோம். எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படையா பேசுற அந்த குணம்தான் ராகுல்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம். சோகமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் என் கையை பிடிச்சுக்கிட்டுத்தான் அழுவார். என்மேல ரொம்ப பாசமா இருப்பார். எனக்கு அப்பா கிடையாது. அந்த பாசத்தையெல்லாம் ராகுல்கிட்டத்தான் பார்த்தேன். அதனாலதான், பெற்றோர் ஆசீர்வாதத்தோடு சீக்கிரமா கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டதிலிருந்து, எங்க திருமணத்தை நடத்தி வெச்சதுவரை எல்லாமே ராகுலோட அம்மாதான்.
ரொம்ப சந்தோஷமா, நிறைய கனவுகளோட எங்க வாழ்க்கையைத் தொடங்கினோம். நான், எப்பவும் இன்டிபென்டன்ட்டா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு. டிப்ளோமா ட்ரிபிள் இ படிச்சிருக்கேன். கபடி விளையாட்டுல கேப்டனாகவும் இருந்திருக்கேன். மெஹந்தி போடுற ஒர்க்கையும் கத்துக்கிட்டேன். நானும் ராகுலும் மேரேஜ் பண்ணினப்போ எங்க ரெண்டு பேரோட வருமானத்தை வெச்சுத்தான் குடும்பத்தை ரன் பண்ணினோம். ஒருநாளைக்கு, மெஹந்தி போடப்போனா 3,000 ரூபாய்வரை கிடைக்கும். என்னோட வருமானத்தை ராகுலோட அம்மாக்கிட்டதான் கொடுப்பேன்.
ஆரம்பத்துல என்னை அவங்களோட சொந்தப் பொண்ணு மாதிரிதான் பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட என்னோட மாமியார், இப்படி மாறுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அவங்களோட அன்புக்காகத்தான் இன்னைக்குவரைக்கும் நான் ஏங்கிக்கிட்டிருக்கேன். 'அம்மா… கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு இருக்கேன். உங்கக்கூடவே வந்து தங்கி, ராகுல் செய்யவேண்டியதையெல்லாம் நான் செய்யுறேம்மா'ன்னு சொன்னேன். ஆனா, அவங்க ஏத்துக்கல. என்மேல வெறுப்பாகவே இருக்காங்க. அவங்களோட கோபம் என்னைக்காவது குறையும்னு நினைக்கிறேன்.
ராகுலோட கனவே எல்லாரையும் சிரிக்கவைக்கணும்ங்கிறதுதான். ஆனா, அவரோட இறப்புக்குப்பிறகு அவரோட போஸ்ட் எதுவுமில்லாம ஃபாலோயர்ஸ் அவரை மிஸ் பண்ணினதை நான் உணர்ந்தேன். அதனால, என்னோட மாமியார்கிட்ட ராகுலோட இன்ஸ்டா ஐ.டி., யூடியூப் பாஸ்வேர்டுகளை கேட்டபோது அவங்க கொடுக்க மறுத்துட்டாங்க.
அதுக்கப்புறம்தான், என்கிட்ட இருக்கிற ஆவணங்களை வெச்சு இன்ஸ்டா ஐடி மட்டும் நானே ரெக்கவரி பண்ணினேன். அதுலதான், இப்போ ராகுல் மாதிரியே காமெடியான வீடியோக்களை அப்லோடு பண்ணிக்கிட்டிருக்கேன். ராகுலே திரும்பி வந்த மாதிரி இருக்குன்னு பலரும் கமன்ட் பன்றாங்க. அதை, பார்க்கும்போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பவும் ராகுல்தான் எனக்குள்ள இருந்துக்கிட்டு என்னை இயக்கிக்கிட்டிருக்கார். அவர், உயிரோடு இருக்கும்போது என்னையும் ரீல்ஸ்லாம் பண்ணச் சொல்லுவார். எனக்கு அதில் இன்ட்ரஸ்ட் இருந்ததில்ல. ஆனா, அவர் பன்ற ரீல்ஸைப் பாராட்டி என்கரேஜ் பண்ணுவேன். பொட்டு வைக்கிறது, பவுடர் போடுறது, க்ளிப் போடுறதுன்னு மேக்கப் எல்லாம் நான்தான் போட்டு விடுவேன்.
ராகுலை இன்ஸ்டாவுல பத்து லட்சம் பேர் ஃபாலோ பண்றாங்க. அவங்க எல்லாரையுமே சிரிக்க வைக்கணும்ங்கிறதுதான் ராகுலோட கனவா இருந்துச்சு. ஆனா, அது ரொம்ப நாள் நீடிக்கல.
எனக்கு வயசு 21 ஆகுது. இந்த சின்ன வயசுலேயே கணவரை இழந்துட்டு நிற்கும்போது சமூகம் எப்படியெல்லாம் என்னைப் பார்க்கும்னு உங்களுக்கே தெரியும். எங்க போனாலும் என்னைத் திட்டுறாங்க. ஒரு மாதிரி பார்க்கிறாங்க. வேலையும் கிடைக்கமாட்டுது. ராகுலோட நினைவுகளிலிருந்து என்னால மீண்டு வரவே முடியல.
ராகுல் என்கூட இருக்கும்போது என்னையும் சிரிக்கவைப்பார். அவரோட ஃபாலோயர்ஸையும் சிரிக்கவைப்பார். இப்போ, அவரை நானும் ஃபாலோயர்ஸும் ரொம்பவே மிஸ் பண்ணினோம். அதனால்தான், என்னோட சோகங்களை எல்லாம் மறைச்சுக்கிட்டு, நானே ராகுலா மாறி அவர் மாதிரியே இன்ஸ்டா ரீல்ஸுல காமெடி பண்ணிக்கிட்டிருக்கேன். `பொதுவா, பொண்ணுங்க இப்படி தங்களை அசிங்கமா; காமெடியா காண்பிச்சுக்க மாட்டாங்க. ஆனா, ராகுலை நீங்க எந்தளவுக்கு நேசிச்சிருக்கீங்கன்னு இப்போதான் தெரியுதுன்னு' பலரும் நெகிழ்ந்துபோய் சொல்றாங்க. ராகுலோட ரியாக்ஷன்ஸ் ரொம்ப சிரிக்க வைக்கும். அவர்க்கூடவே இருந்திருக்கேன். அவரோட எல்லா வீடியோஸையும் நேர்லயே ரசிச்சிருக்கேன். அதனால, அவரோட காமெடி சென்ஸை எனக்குள்ளேயும் கடத்திட்டு போயிருக்கார்.
அவர்கிட்ட, ஆசீர்வாதம் வாங்கிட்டுத்தான் ஒவ்வொரு வீடியோவையும் பன்றேன். ஒவ்வொரு வீடியோவையும் பண்ணும்போதும் அழுகையும் சொல்லமுடியாத வலியும் வேதனையும் இருக்கும். ஆனா, அதையெல்லாம் உள்ளுக்குள்ள மறைச்சுக்கிட்டுத்தான் நான் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னோட முதல் வீடியைப் பார்த்தீங்கன்னாலே என்னோட கண்ணெல்லாம் சிவந்திருக்கும். என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது. ஆனா, ராகுலோட ஃபாலோயர்ஸ், ரசிகர்கள் எல்லோருமே அதே அன்பையும் பாராட்டையும் சப்போர்ட்டையும் கொடுக்கிறாங்கன்னு நினைக்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு.
'ராகுல் அண்ணாவை உங்க மூலமா பார்க்கிறோம். ராகுல் அண்ணா சாகல. ராகுல் அண்ணாதான் உங்க முகத்துல தெரியுறார் அப்படின்னு சொல்றாங்க. நாங்க இருக்கோம்'னு சொல்லி அதே வரவேற்பைக் கொடுக்கிறாங்க. இதெல்லாம், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ராகுலுக்காக அவங்களோட ஃபாலோயர்ஸ்க்காகவும் எந்த அவமானம் வந்தாலும் எதிர்கொண்டு ராகுல் மாதிரியே சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பேன். ராகுலோட ஐடியை எந்தக் காரணத்துக்காகவும் மிஸ் யூஸ் பண்ணமாட்டேன். " கண்கள் கலங்க சொல்லி முடித்தார் தேவிகாஸ்ரீ