செய்திகள் :

Andhra Pradesh: `பெண்களுக்கு Work From Home' அரசின் திட்டம்! -நிபுணர்கள் சொல்வதென்ன?!

post image
ஆந்திர பிரதேசத்தில் சில துறைகளில் பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை வழங்க உள்ளோம் என்று அறிவித்துள்ளார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

இதுக்குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை பெரியளவில் ஏற்படுத்தி தர திட்டமிட்டு வருகிறோம்.

முதலில், இந்த சர்வதேச அறிவியல் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தினத்தில் இந்தத் துறையில் இருக்கும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இன்று அவர்களுடைய சாதனைகளை கொண்டாடி, இந்தத் துறையில் மேலும் அவர்களுடைய வளர்ச்சி மற்றும் பங்களிப்பை வளர்க்க உறுதிக்கொள்வோம்.

Work From Home (Representational Image)

கொரோனா பேரிடரின் போது, பணி சூழல் என்பது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியது. அந்த நேரத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அதிகளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ரிமோட் வொர்க், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், Neighbourhood Workspaces போன்றவை நெகிழ்வுத்திறன், அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றை கொடுத்து பிசினஸ் மற்றும் ஊழியர்களை சம அளவில் மேம்படுத்தும்.

மேலும், இந்த மாதிரியான முன்னெடுப்புகள் தனிப்பட்ட வாழ்க்கை - வேலை ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய பெரியளவில் உதவும். இந்த மாதிரியான ட்ரெண்டுகள் மூலம் ஆந்திர பிரதேசத்தில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆந்திர பிரதேசம் ஐ.டி மற்றும் ஜி.சி.சி பாலிசி 4.0 இந்த மாதிரியான கேம் - சேஞ்சிங் மாற்றமாக இருக்கும். ஒவ்வொரு நகரம், நகராட்சி, மண்டலம் ஆகியவற்றில் ஐ.டி ஆபீஸ் ஸ்பேஸை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த முன்னெடுப்பு முக்கியமாக பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு இப்படி 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை தருவது சில நன்மைகளையும் கொண்டுள்ளது, சில தீமைகளையும் கொண்டுள்ளது. இதுக்குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது...

ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார்:

"அலுவலகத்திற்கு வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்கிறப்போது பெண்களுக்கு போக்குவரத்து, குடும்பத்தில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளால் சில சிக்கல்கள் எழும். இதனால், சில சமயங்களில் விடுமுறை, பர்மிஷன் ஆகிவயை ஏற்படும். இதனால், கரியர் முதல் புரோமசன் வரை பாதிக்கப்படும்.

குடும்ப சூழலால் அலுவலகத்திற்கு சென்று வேலைப்பார்க்க முடியாத நிறைய தகுதியான பெண்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சில நிறுவனங்களில் ஆள்கள் பற்றாக்குறை வேறு உள்ளது. இந்த நிலையில், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அறிமுகப்படுத்தப்பட்டால், ஆள்பற்றாக்குறையும் குறையும். தகுதியான பெண்களுக்கும் கரியரும் பாதிக்கப்படாது.

ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார்

தமிழ்நாடு, கேரளாவை விட...

வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை அனைத்து தொழில்களுக்கும் தந்துவிட முடியாது என்பது மிக முக்கியமானது ஆகும். இதற்கு மிக சரியான உதாரணம், 'உற்பத்தி துறை'. உற்பத்தி துறையில் இயந்திரங்கள் இன்றியமையாதது. அவை இல்லாமல் அந்தத் துறையே இயங்க முடியாது. இந்த நிலையில், இங்கே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியப்படாது. ஐ.டி போன்ற சில துறைகளில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது பெண்களுக்கு மட்டுமல்ல உதவியல்ல... இது நிறுவனங்களுக்கும் பெரிய தொகையை சேமித்து தரும். ஒருவர் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்போது, அவர்களுக்கான இடம், தண்ணீர் வசதி, கழிவறை வசதி, மின்சாரம் ஆகியவை தேவைப்படும். ஆனால், அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது பெரிய அளவில் நிதி மிச்சமாகும். இந்த நிதியை அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது, ஆந்திராவின் கல்வியறிவு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த வசதியை கொண்டுவரும்போது, பெண்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம் கூட செய்யலாம்' என்று அங்கே பெண்கள் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கும். இதனால், அந்த மாநிலத்தின் கல்வியறிவு விகிதமும் அதிகரிக்கும்".

Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா

Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா:

"ஹெச்.ஆர் துறையில் ஊழியர்களை நேரில் பார்க்க வேண்டும்... அவர்களது வேலையை கவனிக்க வேண்டும் என்பதால் இங்கே வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு சாத்தியமில்லை. இதுப்போன்ற சில துறைகள் இருந்தாலும், இன்னும் சில துறைகளில் வொர்க் ஃபரம் ஹோம் எடுக்கும் வசதி உள்ளது.

சமூக பந்தம்?!

இதில் வெறும் பிளஸ் பாயிண்டுகள் மட்டுமல்ல...நெகட்டிவ்களும் உள்ளன. அதாவது, அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை பார்க்கும்போது இருக்கும் கரியர் வளர்ச்சியின் அதே அளவு, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்காது. காரணம், அவரது உயரதிகாரி அவரை நேரில் பார்க்காமல், வேலை மூலம் மட்டுமே பார்ப்பார். அதனால், குறிப்பிட்ட அந்த ஊழியரின் திறன் அவ்வளவு தெளிவாக அவரது உயரதிகாரிக்கு தெரியாது.

அலுவலகத்திற்கு வேலைக்கு வரும்போது பிறருடன் பேசி பழகும் வாய்ப்பு, பிறரிடம் இருந்து கற்றுக்கொள்வது என சமூக பந்தம் உருவாகும். ஆனால், இது வொர்க் ஃப்ரம் ஹோமில் சாத்தியமில்லை".

Work From Home

ஐ.டி ஊழியர் வைஷ்ணவி:

"வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னா காலையில பரபரப்பா எந்திரிச்சு கிளம்பி, டிரவல் பண்ணி ஆபீஸ் போகணும்னு இல்ல. பொறுமையா எந்திரிச்சு லாகின் பண்ணிட்டு, நமக்கு ஆபீஸ்ல இருக்க வேலை, வீட்டுல இருக்க வேலைனு ரெண்டு வேலையும் செஞ்சு பேலன்ஸ் பண்ணிக்க முடியும்.

நெகட்டிவ் சைட்னு பாத்தோம்னா, ஆபீஸ்க்கு போகும்போது இருக்குற பிரேக்குகள் வீட்டுல இருக்காது. எப்பவுமே வேலை செஞ்சுட்டு இருக்கற மாதிரி இருக்கும். நமக்கு சாப்பாடு டைம்னாலும் கூட, 'வீட்டுல தான இருக்கீங்க... இந்த வேலைய முடிச்சுட்டு போங்க' - ங்கற பேச்சு வரும். வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது வேறு எந்த முகத்தையும் பாக்காம, ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்".

ஐ.டி ஊழியர் தனுவர்ஷா:

"தனிப்பட்ட வாழ்க்கை - வேலை - ரெண்டையும் எளிதா பேலன்ஸ் செய்யலாம். இப்போது தான் வேலை செய்யணும்னு இல்லாம, நமக்கு ஏத்த நேரத்துல வேலை செய்யலாம். பெண்களுக்கு முக்கியமா இது பெரிய அளவிலான கரியர் பிரேக் இல்லாம தடுக்கும். நைட் ஷிப்ட் வேலை பாக்குறவங்களுக்கு இது ஒரு வரம்னே சொல்லலாம்.

வீட்டுல இருந்து ரொம்ப தூரத்துல ஆபீஸ் இருக்குங்கறவங்களுக்க வொர்க் ஃபர்ம் ஹோம் மூலமா போக்குவரத்து செலவு, அங்க வீடு எடுத்து தங்கற செலவை குறைக்கலாம். கல்யாண ஆனவங்களுக்கு அவங்க வீட்டையும், வேலையையும் சம அளவுல பாத்துக்க வொர்க் ஃப்ரம் ஹோம் நல்ல வாய்ப்பு.

ஐ.டி ஊழியர் தனுவர்ஷா

ஆனா, ஆபீஸ்ல போய் வேலை பாக்கறவங்களை ஒப்பிடும்போது, இவங்களுக்கு பெரியளவில் கரியர் வளர்ச்சி இருக்காது... அதனால, புரோமஷன் போன்ற விஷயங்கள் இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடாது. அவங்க வேலை செய்யற புராஜெக்ட் பத்தியே அவங்களால அதிகம்ம் தெரிஞ்சுக்க முடியாது. அப்டேட், அப்கிரேடும் இவங்களுக்கு ரொம்பவே கம்மியா இருக்கும்".