Auditor: 'ஆடிட்டர்' ஆக வேண்டுமா? என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? முழு விவரம்!
பெரிய நிறுவனங்களில் 'ஆடிட்டர்' என்ற வார்த்தையை அடிக்கடி நாம் அதிகம் கேட்டிருப்போம். மேலும், இன்று பல மாணவர்களுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு என்ன படிக்க வேண்டும்... எப்படி தயாராக வேண்டும் என்ற வழிகாட்டியே இந்தக் கட்டுரை.
என்ன படிக்க வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்பு, ஆடிட்டர் என்ன வேலைகள் பார்ப்பார் என்று தெரிந்துகொள்வோம். ஆடிட்டர்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்ற இடங்களில் வரி எவ்வளவு கட்ட வேண்டும், வருமானத்தைச் சரியாக நிர்வகிப்பது எப்படிப் போன்றவற்றுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தருவார்கள். மேலும் ஆடிட்டர்களுக்கு அரசுத் துறைகளிலும் வேலைவாய்ப்பு உண்டு.
ஆடிட்டர் என்றால் என்ன?
'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' என்பதையே எளிமையாக ஆடிட்டர் என்று கூறுகிறோம். இது சுருக்கமாக 'சி.ஏ' என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிட்டருக்கான தேர்வை 'தி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பு நடத்துகிறது.
சி.ஏ-வில் கணக்கியல் (Accounting), நிதி (Finance), தணிக்கையியல் (Auditing) ஆகியவற்றைப் பற்றிப் படிப்பார்கள். மேலும், அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
சி.ஏ தேர்வுகள்...
சி.ஏ தேர்வு நான்கு நிலைகளில் நடத்தப்படும். அவை,
1. பவுண்டேஷன் கோர்ஸ் (Foundation course),
2. இன்டர்மீடியட் கோர்ஸ் (Intermediate course),
3. ஆர்டிகல்ஷிப் (Articleship),
4. இறுதி பயிற்சி (Final course)
இரண்டு வழிகள்...
சி.ஏ படிப்பில் சேர இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, பவுண்டேஷன் கோர்ஸ். இதில் எந்த பிரிவில் 12-ம் வகுப்புகள் முடித்திருந்தாலும் சி.ஏ சேரலாம். இன்னொன்று, நேரடி நுழைவு (Direct Entry). இதில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சேரலாம். மேலும், இன்டர்மீடியட்டில் நேரடியாகச் சேர முடியும்.
இப்படி நேரடியாகச் சேர, வணிகவியல் துறையில் குறைந்தபட்சமாக 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.ஏ., பி.சி.ஏ., பி.இ., பி.டெக்கில் பட்டம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பவுண்டேஷன் தேர்வு
இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் +2-வில் கட்டாயம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெயரில் குறிப்பிடுவதைப் போல இது ஒரு அடிப்படை தேர்வு ஆகும்.
இன்டர்மீடியட் தேர்வு
பவுண்டேஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் டைரக்ட் என்ட்ரி மூலம் வந்தவர்கள் இந்த தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில் மொத்தம் இரண்டு குரூப். ஒவ்வொரு குரூப்பிலும் தலா 3 தாள்கள். இரண்டு குரூப்கள் சேர்த்தும் எழுதலாம்... தனித்தனியாகவும் எழுதலாம். அது மாணவர்களின் விருப்பமே.
இன்டர்மீடியத் தேர்வுக்குப் பின்னர், சி.ஏ தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிவதற்காக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. ஆர்டிகல்ஷிப் சேருவதற்கு முன்பு ICITSS and Orientation என்று இரண்டு தேர்வுகளும், அதற்குப் பின்பு இரண்டு தேர்வுகளும் உண்டு.
ஆர்டிகல்ஷிப்
ஆடிட்டர் என்றால் என்ன என்பதை பிராக்டிகல்லாக தெரிந்துகொள்ள ஆடிட்டரின் கீழ் இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுப்பதே ஆர்டிகல்ஷிப் ஆகும். இதில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உண்டு.
பின் என்ன... இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டால், நீங்கள் ஆடிட்டர் தான்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...