BB Tamil 8 Day 52: `என் பொண்ணை ரிஜெக்ட் செய்தவன்' - வி.ஜே.விஷால் குறித்து நடிகையின் அம்மா
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி உட்பட பதினெட்டுப் போட்டியாளர்கள் முதலில் உள்ளே சென்றனர்.
அதில் சிலர் வெளியேற, வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ராயன், மஞ்சரி உள்ளிட்ட ஆறு பேர் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு லவ் ஸ்டோரி உருவாகியிருப்பதாகப் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு கேட்கிறது.
அதாவது தர்ஷிகாவுக்கும் வி.ஜே, விஷாலுக்குமிடையேதான் அந்தக் காதல் என்கிறார்கள். அதுகுறித்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையிலும் பல அதிருப்திகள் உருவாகி வருகிறது. கடந்த எபிசோட்களில் பவித்ரா இவர்கள் காதல் அட்ராசிட்டி குறித்து புலம்பியிருக்கிறார்.
பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் யாராவது இரண்டு பேருக்கிடையில் காதலை உருவாக்கிக் கோத்து விடத்தான் நினைப்பார்கள். அது நிகழ்ச்சிகாக நடக்கிறதா, போட்டியாளர்களின் கேம் பிளானா என்பது குழப்பமாகவே இருக்கும்.
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி காதலித்த ஜோடி நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் திருமணமே செய்து கொண்டது நினைவிருக்கலாம்.
இந்த வகையில்தான் இப்போது தர்ஷிகா விஷால் கதையும் போகிறதா என பிக் பாஸ் ரசிகர்கள் ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில் விஷாலின் நண்பர்கள் வட்டத்தில் சிலரிடம் பேசினோம்.
‘’விஷாலோட அப்பா ஃபைனான்சியர். படிச்சு முடிச்சுட்டு மாடலிங் வாய்ப்புக்காக அலைஞ்சிட்டிருந்த நேரம் அது. புதுசா ஒரு சீரியல்ல ஒரு சின்ன கேரக்ட்ர்ல நடிக்க ஒரு ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டாங்க. பிரம்மா சார்தான் டைரக்டர். சீனியர் நடிகை ஒருத்தர்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னப்ப அவங்கதான் இந்தப் பையனைப் பத்திச் சொன்னாங்க. பேசிக் கேட்டதும் உடனே நடிக்க வந்துட்டார். போட்டோ ஷூட் பண்ணிப் பார்த்துட்டு டைரக்டர், `இவர் செட் ஆவாரான்னு டவுட்டா இருக்கேன்னு' சொன்னார்.
ஆனா ’இல்ல சார், ஆர்வமா இருக்கான், வாய்ப்பு கொடுங்க’ன்னு நான் அவனுக்காகப் பேசினேன். கடைசியில அந்த சீரியல்ல கமிட் ஆகிட்டார். அவனுடைய முதல் சீரியல்ல என் பொண்ணுக்கு ஜோடி. இப்படித்தான் விஷாலோட சீரியல் அறிமுகம் நடந்துச்சு.
சீரியல்ல கமிட் ஆனதுமே ஃபீல்டை தெளிவா (?) புரிஞ்சுகிட்டு, சீரியல் ஷூட் முடிஞ்சதும் ஆர்ட்டிஸ்டுகள், உதவி இயக்குநர்களை தன்னுடைய கார்லயே கொண்டு போய் விடுவான். இப்படி பலர்கிட்டயும் பழகியே சேனலுக்குள்ளேயும் தொடர்புகளை வளர்த்துக்கிட்டதால கொஞ்ச நால்ல டான்ஸ் ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கிட வாய்ப்பு உருவாச்சு.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து ஹிட் சீரியல், `குக்கு வித் கோமாளி' மாதிரியான பிரபலமான ரியாலிட்டி ஷோக்கள் இப்ப பிக் பாஸ் வரைக்கும் வந்துட்டான். ஆனா இதுல என்ன வேடிக்கைன்னா எந்தப் பொண்ணு கூட முதல் முதலா ஜோடியா நடிச்சானோ அதே பொண்ணு கூட கொஞ்சம் வளர்ந்த பிறகு நடிக்க மறுத்ததும் நடந்தது. மொத்தத்துல பழசை மறந்துடுற ஒரு ஆள் விஷால்’’ என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத, விஷால் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகையின் அம்மா.