செய்திகள் :

Doctor Vikatan: மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

post image

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக முதுகுவலிக்கான மருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும் எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன. மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்டா? இந்தப் பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.   

பொது மற்றும் நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

ஹைடோசேஜ் மருந்துகள் கொடுக்கும்போது சாதாரண நபருக்கு அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதுவே ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கோ, உடலில் சத்துக் குறைபாடுகள் கொண்டவருக்கோ, இப்படி ஹைடோஸ் மருந்துகள் கொடுக்கும்போது மருத்துவர்களே பெரும்பாலும் கவனமாகப் பார்த்துதான் கொடுப்பார்கள். பிரச்னை வரும் எனத் தெரிந்தால் அத்தகைய மருந்துகளைத் தவிர்த்துவிடுவார்கள்.

வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு பதில் நரம்புகளின் வழியே செலுத்தக்கூடிய ஐவி ஊசியாக அந்த மருந்துகளைக் கொடுப்பார்கள். ஒருவேளை அப்படி நரம்புவழி ஊசியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைப்போருக்கு, கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் இரைப்பை அழற்சி, வாய்ப்புண் போன்றவை வராமலிருக்க புரோபயாடிக்ஸ் மருந்துகளையும் மருத்துவர்கள் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வயிற்றில் அமிலச் சுரப்பைக் குறைப்பதற்கான மருந்துகளை சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள். எனவே, முதலில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் கழித்து சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து ப்ரீ-பயாடிக்ஸ் மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய குடல் பகுதியில் நல்ல பாக்டீரியா இருக்கும்வரை வாய்ப்புண், வயிற்றுப்புண் வராது.

மாத்திரைகள்

வீரியமான மருந்துகளும், அதிக டோஸ் மருந்துகளும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கப் பார்க்கும். அதனால்தான் குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது வாய்ப்புண் வருகிறது. வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தாலும் வாய்ப்புண் வரலாம். பால் மற்றும் பால் பொருள்களில் வைட்டமின் பி 12 அதிகமிருப்பதால் அந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். 

ஏற்கெனவே அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கும், டைபாய்டு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் அதன் பாதிப்பு முதலில் வாய்ப்புண்களாகத்தான் வெளிப்படும். வாய்ப்புண் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் குடல்-இரைப்பை மருத்துவரை அணுகி, அல்சர் பாதிப்பு இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். பிரச்னையின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.