தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
Doctor Vikatan: மெனோபாஸில் கொத்துக்கொத்தாக உதிரும் முடி... கட்டுப்படுத்த என்னதான் வழி?
Doctor Vikatan: என் வயது 47. குறிப்பாக மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. தலைமுடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. தலையை சீவினாலே கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறது. இப்படியே போனால், தலையில் பாதிக்கும் மேல் வழுக்கையாகி விடுமோ என பயமாக இருக்கிறது. முடி உதிர்வைக் கட்டுப்படுத்த ஏதேனும் தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.
மெனோபாஸ் காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் சமநிலையின்மையை குணமாக்க வைட்டமின் தெரபி மிக முக்கியம். குறிப்பாக பி வைட்டமின் மிக முக்கியம். அதிலும் வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் ஆசிட் இரண்டும் மிக மிக முக்கியம். இவற்றை மாத்திரை வடிவிலோ, உணவுகளின் மூலமோ எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து வைட்டமின் டி சத்து குறைந்தாலும் முடி உதிர்வு, முடி மெலிதல் போன்றவை இருக்கலாம். வயதாக, ஆக நம் உடலில் கொலாஜென் உற்பத்தியும் குறையத் தொடங்கும். அதன் விளைவாலும் முடி வறண்டு, உயிரே இல்லாதது போல மாறும். போதிய அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் முடி உதிர்வு இருக்கும். வைட்டமின் பி குடும்பத்தைச் சேர்ந்த பயோட்டின் சத்தும் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியம்.
அசைவம் சாப்பிடுவோர் என்றால், தினமும் ஒரு முழு முட்டை எடுத்துக்கொள்ளலாம். சைவ உணவுக்காரர்கள் என்றால், முளை கட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் புரோட்டீன் சப்ளிமென்ட்ஸும் எடுத்துக்கொள்ளலாம். முடியின் ஆரோக்கியத்துக்கு கறிவேப்பிலை மிகப் பிரமாதமாக உதவும். கறிவேப்பிலையை சட்னியாக செய்து தினமும் சேர்த்துக்கொள்ளலாம். பத்து- பதினைந்து கறிவேப்பிலைகளை மோருடன் சேர்த்து அடித்தும் குடிக்கலாம். பொடியாக அரைத்து சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்தோ, இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.
இளநரையைத் தவிர்ப்பது, முடி வளர்ச்சிக்கு உதவுவது என நெல்லிக்காயும் கூந்தலுக்கு நல்லது. தினமும் 2 நெல்லிக்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். பொரியல், கூட்டு, சூப் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் ஒரு கீரை சேர்த்துக்கொள்ளலாம். ஒருநாள் விட்டு ஒரு நாள் வெங்காய சூப் குடிக்கலாம். அது பிடிக்காதவர்கள், பரங்கிக்காய் சூப், வெங்காயம்- தக்காளி சூப் குடிக்கலாம். கேரட்- வெங்காயம் சூப்பும் குடிக்கலாம்.
மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்கள், ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். இது முடி உதிர்வுக்கு மட்டுமன்றி, மெனோபாஸ் காலத்தில் வரும் ஹாட் ஃபிளாஷஸ், உடல் வலி, மனநிலையில் ஏற்படும் தடுமாற்றங்கள், சரும வறட்சி போன்றவற்றையும் குணப்படுத்தும். உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இதை எடுத்துக்கொள்ளலாம். இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, வைட்டமின் டி ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதிக்கும் ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். அவற்றில் குறைபாடு இருந்தால் மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுக்க வேண்டியிருக்கும். தினமும் 3-4 பேரீச்சம்பழங்களும், 2 அத்திப்பழங்களும் எடுத்துக்கொள்வது இரும்புச்சத்துக் குறைபாட்டை சரியாக்கி, முடி உதிர்வை நிறுத்தும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.