செய்திகள் :

Doctor Vikatan: காற்றில் பறக்கும் weightloss சபதம்... cravings-ஐ கட்டுப்படுத்த என்ன வழி?

post image

Doctor Vikatan: ஒவ்வொரு புத்தாண்டிலும் வெயிட்லாஸ் சபதம் எடுக்கும் பலரில் நானும் ஒருத்தி. ஆரம்பம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், டயட் இருக்கத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே இனிப்பாக, புளிப்பாக, காரமாக... இப்படி எதையாவது சாப்பிடும் கிரேவிங் ஏற்படும். போகப்போக அது அதிகமாகி, பத்தே நாள்களில் என் புத்தாண்டு சபதம் காற்றில் பறக்கும். டயட் இருப்பவர்களுக்கு கிரேவிங் ஏற்படும்போது அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்

டயட் எனப்படும் உணவுக்கட்டுப்பாட்டை ஆரம்பித்தால், நிச்சயம் கிரேவிங்ஸ் (உணவுகளின் மீதான ஈர்ப்பு) வரும். அதைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொண்டாலே, எடைக்குறைப்பில் உங்கள் இலக்கை எளிதில அடைந்துவிட முடியும். பலரும் அந்த டெக்னிக் தெரியாமல்தான் weightloss சபதம் என்ற விஷயத்தில் கோட்டை விடுகிறார்கள்.

இந்த கிரேவிங்ஸ், ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கலாம்.  சிலருக்கு டயட் இருக்கும்போது வழக்கத்தைவிட அதிகமாக உப்பு அதிகமான உணவுகளின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். அவர்கள்,  சிறிது சோடாவில் எலுமிச்சைப்பழச்சாறும், உப்பும் சேர்த்துக் குடிக்கலாம்.  டயட் இருக்கும் பலரும் சொல்கிற பிரச்னை, இனிப்பு உணவுகளின் மீதான தேடல்... புதிதாக டயட் இருக்க ஆரம்பித்திருப்பவர்கள், வீட்டில் டார்க் சாக்லேட் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அந்த உணர்வு கட்டுப்படும்.  அப்படியில்லாவிட்டால், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், உலர்ந்த ப்ரூன்ஸ், ஆப்ரிகாட் போன்ற டிரை ஃப்ரூட்ஸை சிறிது சாப்பிட்டாலே அந்த உணர்வு கட்டுப்படும்.

புதிதாக டயட் இருக்க ஆரம்பித்திருப்பவர்கள், வீட்டில் டார்க் சாக்லேட் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அந்த உணர்வு கட்டுப்படும்.

மக்னீசியம், குரோமியம் மற்றும் புரோட்டீன் சத்துகளில் குறைபாடு இருந்தாலும் இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற தேடல் உருவாகலாம். எனவே, இதையும் செக் செய்து கொள்ளவும். இதுபோன்ற கிரேவிங்ஸை கட்டுப்படுத்த சிம்பிளான ஒரு டெக்னிக் இருக்கிறது. வாயை பிரஷ் செய்து பாருங்கள். அதையடுத்து எதையும் சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. அதேபோல ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிக்கலாம். பிளெயின் சோடா குடிக்கலாம். இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை எல்லாம் உணவுத்தேடலை அதிகரிக்கும். வீட்டில் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை வாங்கி ஸ்டாக் வைக்காதீர்கள். அப்படி வைத்தால் நிச்சயம் அவற்றைத் தேடிச்சென்று சாப்பிடுவீர்கள்.

இந்த வழிகளை எல்லாம் பின்பற்றிப் பாருங்கள். இந்த வருடம் உங்கள் புத்தாண்டு சபதம் நிச்சயம் வெற்றியைத் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.