"பாலிவுட்டில் கேமராமேனாகப் பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன்; காரணம்" - நட்ரா...
Emden: முதலாம் உலகப்போரில் கிடுகிடுக்கச் செய்த எமகாதக ‘எம்டன்’ - சென்னையைத் தாக்கியது எப்படி?
1914, செப்டம்பர் 22 முதலாம் உலகப்போர் தொடங்கிய காலக்கட்டம் அது. நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கும். நவராத்திரி காலம் என்பதால் சென்னை மாநகரமே மின்னிக்கொண்டிருந்தன. கலங்கரை விளக்கம் வழக்கம் போல ஒளி வீச சென்னையை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தக் கொண்டாட்டம் சோகத்தில் முடியும் என்று அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பத்தே நிமிடத்தில் சென்னை மாநகரைக் கதிகலங்க வைத்துவிட்டது அந்தப் போர்க்கப்பல். 13 சுற்றுகள் ஒரு சுற்றுக்கு 10 குண்டுகள் வீதம் 130 குண்டுகளில் சென்னையைத் துளைத்தெடுத்தன. அந்தக் கப்பலில் உள்ள பீரங்கிக் குண்டுகள். இப்படி ஒரு செயலைச் செய்து பிரிட்டிஷாரை மிரளவைத்த அந்தக் கப்பலின் பெயர் எம்டன்.
எம்டன் போர்க்கப்பல்
ஜெர்மனி ஏற்பாடு செய்த இந்த எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிகளில் இருந்து வெளிப்பட்ட பல குண்டுகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகம், மருத்துவமனை, ராயபுரத்தில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை ஜார்ஜ் டவுன் போன்ற சில பகுதிகளைத் தாக்கின.

பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பர்மா ஆயில் நிறுவனத்தில் 4 டேங்குகளில் இருந்த 3.5 லட்சம் கேலன் கச்சா எண்ணெய் தீப்பிடித்தது. முதல் உலகப் போரில் இந்தியாவின் மீது நடந்த ஒரே தாக்குதல் இதுதான். ஆங்கிலேயரையே தலை குனிய வைத்த எம்டனை சென்னை மக்கள் பெருமையுடன் பேசினர்.
எதிரி நாட்டு கப்பல்களை சமாதியாக்கிய எம்டன்
1909ல் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலுக்கு வடமேற்கு ஜெர்மனியில் உள்ள எம்டன் என்ற நகரின் பெயர் வைக்கப்பட்டது. முதலாம் உலகப் போர் தொடங்கியபோது இது பசிபிக் பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் கார்ல் வான் முல்லர். அடுத்த சில மாதங்களில் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் இது செயல்படத் தொடங்கியது.

இது அலை வீசும் கடலிலும் வெகு வேகமாகச் செல்லக்கூடியது. பிரிட்டிஷாரைக் கதிகலங்க செய்த இந்த எம்டன் போர்க்கப்பல் 56 ஆயிரம் கி.மீ வெற்றிகரமாகப் பயணித்து 40க்கும் மேற்பட்ட எதிரி நாட்டு போர்க்கப்பல்களை ஆழ்கடலிலேயே சமாதியாக்கி இருக்கிறது. இப்படி தரமான சம்பவங்களை நிகழ்த்திய எம்டனை வைத்துதான் ஜெர்மனி சென்னையில் பிரிட்டிஷாரைத் தாக்கியது.
செம்பகராமன் பிள்ளை
இந்த எம்டன் போர்க்கப்பல் சென்னைக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் செம்பகராமன் பிள்ளை. இவர்தான் ஜெர்மனியுடன் இணைந்து இந்தக் கப்பல் வர உதவி இருக்கிறார். இரண்டாம் உலக போர் சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் எப்படி வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை ஆண்ட பிரிட்ஷார் மீது தாக்குதல் நடத்த முயன்றாரோ, அதுபோன்ற ஒரு செயலில்தான் செம்பகராமனும் ஈடுபட்டிருக்கிறார்.

1891ல் திருவனந்தபுரத்தில் பணியாற்றிய காவல் அதிகாரியின் மகனாய் பிறந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் சென்பகராமன். இவர், இளம் வயதிலேயே சுதந்திர வேட்கையுடன் இருந்திருக்கிறார். சுவிட்ஸர்லாந்தில் அறிவியலில் பட்டமும், ஜெர்மனியில் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் 12க்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றிருக்கிறார்.
ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தவர்
இந்தியர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமையாகவே இருக்கவே தகுதி படைத்தவர் எனக்கூறிய ஹிட்லரை தன் வாதத் திறத்தால் மன்னிப்பு கேட்க வைத்த பெருமை இவருக்குண்டு. இறக்கும் தருவாயில் தனக்குப் பின் மனைவி இந்திய சுதந்திரத்திற்காகப் போராட வேண்டுமெனவும் தனது அஸ்தியை கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவும் படியும் கூறிவிட்டு மறைந்தார் என்று கூறப்படுகிறது.

எம்டனின் இறுதிக்காலம்
சென்னையில் தாக்குதல் நடத்திய 50 நாட்கள் கழித்து, 1914ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொக்கோஸ் தீவுக் கூட்டம் அருகே எம்டன் போர்க்கப்பலை பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் சுற்றி வளைத்தன. அங்கே நடந்த கடும் சண்டையில் பிரிட்டிஷ் கடற்படையின் H.M.A.S சிட்னி போர்க்கப்பல் நடத்திய கடும் தாக்குதலால் எம்டன் போர்க்கப்பல் நிலைகுலைந்து விட்டது.