செய்திகள் :

சிந்துவெளி டூ ஈராக் சுமேரியா : எருமை மாடுகளை விற்ற திராவிடர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் IAS

post image

(அக்டோபர் 08, 2024 விகடன் தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது)

தமிழில் குடிமைப் பணித் தேர்வுகள் எழுதி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான முதல் நபர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ் மாணவரான இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர், ஒடிஷா மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

எத்தனை பெரிய பொறுப்புகளுக்கு நடுவிலும் தமிழை விடாது கைப்பற்றி வருகிறார். தொல்லியல் - பண்பாட்டு ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர், "ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை" என்ற நூலில் சங்க இலக்கியத்துக்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் இருக்கும் தொடர்பினை நிறுவியிருக்கிறார்.

"சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே" எனத் தொடர்ந்து பேசி வருகிறார்.

Balakrishnan IAS
Balakrishnan IAS

காந்தி ஜெயந்திக்கு மறுநாள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'அகழாய்வும் சங்க இலக்கியமும்' என்ற தலைப்பில் உரையாற்றி முடித்திருந்த ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம்.

40 ஆண்டுகலாக ஐ.ஏ.எஸ் அனுபவம் குறித்தும் சிந்து சமவெளி ஆய்வுகளில் அவரது கண்டடைதல்களைப் பற்றியும் நம்மிடம் பேசினார்...

``சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாடு அரசு ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதாக அறிவித்திருக்கிறது. ஜான் மார்ஷல் என்பவர் யார்? தமிழர்களுக்கு அவர் ஏன் முக்கியம்? உங்கள் வார்த்தைகளில் சொல்லுங்களேன்..!”

``ஜான் மார்ஷல் குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பது வியப்பல்ல. 1902-ம் ஆண்டு இந்திய தொல்லியல் நிறுவனத்தின் தலைவராக வந்தவர் ஜான் மார்ஷல். அப்போது அவருக்கு வயது 26, திருமணமான 26 நாட்களில் இந்தியாவுக்கு கப்பலேறினார். இவரை நியமித்தவர் கர்சன் பிரபு.

இந்தியா முழுவதும் பயணம் செய்த ஜான் மார்ஷல், ஒருமுறை திருச்சிக்கு கூட வந்திருக்கிறார். இவரது பணிக்காலத்தில்தான் சிந்து நதிக்கரையில் ஹரப்பா என்ற மிகப் பெரிய நாகரிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிந்துவெளியின் மொழி, பண்பாடு அதுவரை நாம் தொன்மையானதென அறிந்திருந்த வேதகால மொழியை விடவும், ஆரிய பண்பாட்டை விடமும் பழைமையானது, அதன் கருதுகோள்களில் இருந்து வேறுபட்டது, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டினார் ஜான் மார்ஷல்.

அதுவரை இந்தியாவின் நகர்மய வரலாற்றை கங்கைச் சமவெளியில் இருந்துதான் தொடங்கிக்கொண்டிருந்தோம். அதைப் புரட்டிப்போட்டவர் ஜான் மார்ஷல். அதன் பிறகு சுனித் குமார் சட்டர்ஜியும் திராவிட கருதுகோள் பற்றிப் பேசினார்.

1924, செப்டம்பர் 20ம் தேதி லண்டனில் சிந்துசமவெளி ஆய்வுகளை முதன்முறையாக அறிவித்தார் ஜான் மார்ஷல். அதைக் கொண்டாடத்தான் தமிழ்நாடு அரசு அவருக்கு முழு உருவச் சிலை வைக்கவும், ரோஜா முத்தையா நூலகத்துடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

தமிழர்கள் மற்றொரு காரணத்துக்காகவும் ஜான் மார்ஷலுக்குக் கடமைப்பட்டுள்ளோம். 1904ல் தான் அலெக்சாண்டர் ரீ ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தபோது தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்தவர் ஜான் மார்ஷல். அந்த அகழாய்வில்தான் ஆதிச்சநல்லூர் மற்றும் அதன் அருகில் உள்ள 30 இடங்களில் அகழாய்வு செய்யலாம் என கண்டறிந்தனர்.”

``கடந்த 100 ஆண்டுகளாக சிந்துசமவெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இத்தனை ஆண்டுகளில் நடந்த முக்கிய திருப்பங்கள் என்ன?”

``சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது முதலில் ஏற்பட்டது அதிர்ச்சிதான். அது யாருடைய நாகரிகம் என ஒப்பிட்டுப்பார்த்தனர்.

முதல் திருப்பம் மொழியியல் அறிஞர் சுனித் குமார் சட்டர்ஜியின் கருத்துதான். செப்டம்பர் மாதம் சிந்துசமவெளி அறிக்கை வந்தது, டிசம்பரில் சுனித் குமார் சட்டர்ஜி இந்த நாகரிகத்துடன் வேதங்களுக்கும், ஆரியர்களுக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துரைக்கிறார். இது ஆரியர் வருகைக்கும் வேதங்களுக்கும் முற்பட்டது என்கிறார்.

இந்த நாகரிகம் திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்புடையது, தமிழ் தொன்மங்களுடன் தொடர்புடையது என்றும் கூறிய அவர் ஆதிச்சநல்லூரைக் கூட மேற்கோள் காட்டியிருக்கிறார்.

சுனித் குமார் சட்டர்ஜி குறிப்பிட்டது சிந்து சமவெளி நாகரிகத்தின் திராவிட கருதுகோள். இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை.

1925ம் ஆண்டே வேறுசில அறிஞர்கள் சிந்து சமவெளி ஒரு ஆரியப்பண்பாடு என்ற கருத்தை முன்வைத்தனர்.

‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ - ஆய்வில் புதிய தகவல்
‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ - ஆய்வில் புதிய தகவல்

சிந்து சமவெளி கண்டறியப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. அது ஒரு திராவிட கருதுகோள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அது ஒரு ஆரிய பண்பாடு என பேசத் தொடங்கி 99 ஆண்டுகள்தான் ஆகின்றன.

சிந்து சமவெளி மொழியைப் படிக்க பலர் முயன்றனர். இந்தியா மட்டுமல்லாமல் ரஷ்யா, பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என வெளிநாட்டவர்களும் முயன்றனர். குறிப்பாக அஸ்கோபர் போலாவின் ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் இந்த மொழியைப் படிக்க விடாப்பிடியாக பல முயற்சிகள் எடுத்தார். சரியாக அதைப் படிக்க முடியாவிட்டாலும், அவரது ஆய்வுகளின் இறுதியில் இது ஒரு திராவிட மொழி, Most probable Dravidian Language என்ற முட்வுக்கு வந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகள் முக்கியமானவை. இவர் ஐஏஎஸ் பதவியை துறந்துவிட்டு, பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியவர். சிந்து சமவெளி வாசிப்புக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர் எனக் கூறலாம்.

அவர் சிந்து சமவெளி பொறிப்பு, அதற்கான தமிழ் தொடர்பு, வேதங்களில் அது தொடர்பாக எதாவது இருக்கிறதா எனத் தேடி ஆய்வுகளை மேற்கொண்டார். அவரும் அந்த மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றே முன்மொழிந்தார்.

சிந்துவெளிப் பண்பாடு ஆரியர் பண்பாடு அல்ல எனக் கூற முக்கியமான காரணம், சிந்து வெளிப் பொறிப்புகள் எவற்றிலும் குதிரை கிடையாது. எருமை, காளை இருப்பதைக் காணலாம். பசு இல்லாமல் காளை வந்திருக்க முடியாது. ஆனாலும், பசுவின் பொறிப்புகள் எதுவும் முன்னிறுத்தப்படவில்லை.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வறிஞர் குதிரை இருப்பதாகக் காட்ட போட்டோஷாப் எல்லாம் பயன்படுத்தி ஒரு கருத்தை முன்வைத்தார். அதற்கு உலகம் முழுவதுமிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தன. அது குதிரை இல்லை என்பதை நிரூபித்தார்கள். இன்றுவரை சிந்துவெளியில் இருந்த மொழி முழுவதும் வாசிக்கப்படவில்லை. ஆனால் அது ஒரு திராவிட மொழி என்பதற்கான ஆதாரங்கள் வலுபெற்று வருகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்து ஆரியப் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்ற இரண்டுவித கருதுகோள்களும் இருக்கின்றன. இது ஒரு தொடர்கதை...”

``அரசாங்கம் அல்லது அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?”

``வரலாறு என்பதே ஒரு சித்தரிப்புதான். History is a Narrative. எந்த மன்னரும் தான் சுமாரான ஆள்தான் என்றோ, எனக்கு இந்த பலவீனங்கள் எல்லாம் இருக்கிறது என்றோ எழுதி வைப்பதில்லை.

இந்த சித்தரிப்பு அரசு சார்ந்தது. பொது மக்களிடம் அரசு ஒரு கருத்த ஊக்குவிக்கும். சமீபத்தில் ஒருவர் இனி இதை சிந்து சமவெளி என்பதற்கு பதிலாக சிந்து-வேத நாகரிகம் என்று அழைக்க வேண்டும் என்றுப் பேசினார். பாடத்திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சிந்து-சரஸ்வதி நாகரிகம் எனச் சொல்ல வேண்டும் என்றும் ஒருவர் பேசினார்.

இந்த சர்ச்சைக்கு முடிவு கிடையாது. தொடர்ச்சியாக இந்த ஆய்வில் இருப்பதால் நான் இவற்றை நம்புவதில்லை. என்னைப் பொருத்தவரை மக்களின் வரலாறே வரலாறு, மற்றவையெல்லாம் வரப்புத் தகராறு. அரசு என்ன சொல்கிறது என்பதைவிட, அடிப்படையில் தரவுகள் என்ன சொல்கிறது என்பதே முக்கியம்.”

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

``நாம் 'சிந்து முதல் வைகை வரை' என்று பேசுகிறோம், இரண்டு நதிகளுக்கும் இடையில் 2000 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருக்கிறதே...”

``நாம் ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். எங்கள் ரோஜா முத்தையா நூலகத்தில் ஒரு வரைபடம் இருக்கும். அதில் மேலே கன்னியாக்குமரியும், கீழே காஷ்மீரும் இருக்கும்படி தலை கீழாக இருக்கும். வரைபடத்தையும் நாம் பார்க்கும் பார்வை முக்கியமானது.

உலகம் முழுவதுமே எந்த ஒன்றையும் தன்னுடைய நிலையில் இருந்து பார்ப்பது வழக்கம். நான் எதையும் தமிழன் என்கிற முறையில் பார்ப்பேன். எடுத்ததுமே 2000 கிலோ மீட்டர் நில - இடைவெளி, 4500 ஆண்டுகள் கால - இடைவெளி என்பதை பெரியதாக பேசுகிறோம். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், சிந்துவெளி மக்கள் சிறந்த தொழில்முனைவோர்கள், கடலோடிகள்.

சிந்துவெளியில் இருந்து ஈராக்கில் உள்ள சுமேரியாவுக்கு எருமை மாடுகளைக் கொண்டு சென்று விற்றுள்ளனர். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு சென்று விற்றுள்ளனர். இதையெல்லாம் செய்தவர்கள் குஜராத்தில் லோத்தல், கராச்சி பகுதிகளைத் தாண்டி, இந்தியாவின் எஞ்சிய பகுதிகளுடன் தொடர்பில்லாமலா இருந்திருப்பார்கள்...

சிந்து நதிக்கும் வைகைக்குமான இடைவெளி ஏதோ கடக்க முடியாத தூரம் என்பது போல பேசுகின்றனர்.

சிந்துவெளியில் விலையுயர்ந்த ஆபரணமாக மதிக்கப்பட்ட  lapis lazuli என்ற நீல மணிக் கல் ஆப்கானிஸ்தானில் மட்டுமே கிடைக்கக் கூடியது. நான் முன்பே சொன்னதுபோல தென்னிந்தியா கடக்க முடியாத தூரத்தில் இல்லை.

கால இடைவெளியும் அப்படியே. நான் சிந்துவெளியின் மீள் நினைவாகத்தான் சங்க இலக்கியத்தைப் பார்க்கிறேன். சங்க இலக்கியப் பாடல்கள் எழுதப்பட்ட காலத்திலேயே நடைபெற்ற சம்பவங்கள் அல்ல.

கி.மு.2ம் நூற்றாண்டில் இருந்து 400 ஆண்டுகள் சங்க இலக்கியம் எழுதப்பட்டக் காலம்தானே அன்றி, அதில் வரும் சம்பவங்கள் இன்னும் கடந்த காலத்தில் நடந்திருக்கலாம். சங்க காலத்தில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் அன்றைய அனுபவங்கள் மட்டுமல்ல, அவை மீள் நினைவுகள். அந்த மீள் நினைவுகள் என்னை சிந்துவெளிக்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன.

கால, நில - இடைவெளி என்பதையும் நிலத்தையும் காலத்தையும் கடந்தது. நாம் நம் நினைவுகளை எப்போதும் சுமந்துகொண்டே தான் இருக்கிறோம்.”

``இன்றைய காலத்தில் திராவிட பண்பாடு எந்த அளவுக்கு வட இந்தியாவில் பரவியிருக்கின்றது...”

``இன்றைய காலத்தில் திராவிடம் என்ற சொல் நம்மிடம் இருப்பதற்கு காரணம் கால்டுவெல்தான். எல்லிஸ் அதைத் தொடங்கி வைத்தாலும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர் கால்டுவெல்தான்.

அதுவரைத் தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் தனித் தீவு போலத்தான் பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எல்லாமும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என கால்டுவெல்லுக்குப் பிறகுதான் பார்க்கப்பட்டது.

இப்போது நாம் சிந்துவெளி பற்றிப் பேசுகிறோம். அதைக் கடந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானையெல்லாம் தாண்டிச் சென்றால் கிழக்கு ஈரான் அருகே இருக்கக்கூடிய பலூச்சிஸ்தான் பகுதியில் பிராகுயி என்ற மொழி பேசப்படுகிறது. அந்த பிராகுயி ஒரு திராவிட மொழி! அதிலிருக்கக்கூடிய பல சொற்கள் தமிழ் தொடர்புடையவை.

பீகாரில் ராஜ்மஹால் ஹில்ஸ் என்று ஒரு பகுதி இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் பேசும் மால்டோ என்ற மொழி ஒரு திராவிட மொழி. அந்த மக்களை பகடியாஸ் என அழைக்கின்றனர். வட மொழியில் பகட் என்றால் மலை.

ஒடிஷாவில் க்ரூக் என்ற மொழியைப் பேசும் ஒரான் மக்கள் இருக்கின்றனர். குவி, குயி மொழிகளைப் பேசும் கோண்டி மக்கள் இருக்கின்றனர். துருவா, குலாமி, பார்சி என பாகிஸ்தான், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிஷா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் திராவிட மொழிகள் பரவியிருக்கின்றன. திராவிட மொழிக் குடும்பத்தை இப்படி அகன்ற பார்வையில்தான் பார்க்க வேண்டுமேத் தவிர குறுகிய பார்வையில் பார்க்கக் கூடாது.”

கால்டுவெல்

'சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்' என்ற வரியின் அர்த்தம் என்ன?

``சங்க இலக்கியத்தில் நிறைய ஊர்கள், மலைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். மன்னர்கள், புலவர்கள் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்கள் வருவார்கள். ஒரு இடத்தை மலை எனப் பொதுப்பெயருடனும் அதனுடன் சிறப்பு பெயரைச் சேர்த்து பழனிமலை, மருதமலை என்றும் குறிப்பிடுவோம். சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள், மலைகள், ஆறுகளை நான் அப்படியே சிந்துவெளியில் பார்த்தேன்.

இதற்காக 80கள் முதல் கணிப்பொறியில் தகவல்களை சேகரித்து வந்தேன். இந்த காலத்து மக்கள் பார்த்திருக்கவே முடியாத லோட்டஸ் 1,2,3 கம்பியூட்டர் பி1, பி2, லேப்டாப் எக்ஸல், ஆக்ஸஸ் டேட்டாபேஸ், விண்டோஸ், ஜியோகிராபிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என கணினியில் என்னென்ன மாறுதல் ஏற்பட்டாலும் அந்த களத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன். அதற்கு ஏற்றதுபோல என்னுடைய தகவல் களஞ்சியத்தை புதுப்பித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

சங்க இலக்கியத்தில் குறிஞ்சி மக்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களை நான் அப்படியே ஒடிஷாவிலும் சத்திஸ்கரிலும் நேரில் பார்த்தேன்.

குறிஞ்சி நிலத்தில் ஒரு பாட்டை எடுத்துக்கொள்வோம். தலைவி காதலிக்கிறாள். அவளுக்கு ஒரு தோழி இருக்கிறாள். தலைவன் காதலிக்கிறான், அவனுக்கு தோழன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் பாங்கன். இந்த கதாப்பாத்திரங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

காதலிக்க உதவும் தோழன், தோழிகளை சங்க இலக்கியம் பாங்கர் கூட்டம் பாங்கியர் கூட்டம் என்கிறது.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

தலைவி காதலிப்பதை முதலில் தோழி அறிந்துகொள்கிறாள். அவள் செவிலித்தாயிடம் சொல்லுவாள். எனக்கு இந்த செவிலித்தாய் யார் என்பதில் குழப்பம் இருந்தது. பொதுவாக பணக்காரர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள செவிலித்தாயை வைத்திருப்பார்கள். எப்படி எல்லாருக்கும் அந்த வசதி இருந்திருக்க முடியும்.

செவிலித்தாய் உண்மையான தாயிடம் காதல் விவகாரத்தைத் தெரிவிப்பாள். தாய் தன் உடன் பிறந்தவர்கள் உட்பட உறவினர்களுக்கு தெரிவிக்க அவர்கள் காதலை மறுப்பார்கள். சண்டைக்குப் பிறகு திருமணமும் நடக்கலாம் அல்லது காதலர்கள் ஊரை விட்டு செல்லலாம். அதற்கு உடன்போக்கு என்று பெயர். தலைவன் - தலைவியின் காதலை தோழி உலகம் அறிய கூறுவது அறத்தொடு நிற்றல்.

எனக்கு செவிலித்தாய்க்கான விடை கிடைத்தது ஒடிஷாவில். அங்கு எப்போதும் பெண்கள் தங்கள் தோழிகளுடன் சேர்ந்தே நடந்து செல்வார்கள். சந்தையில் தோழர்களுடன் வரும் பையனுடன் காதல் ஏற்படும். இவரின் நண்பர்களும் தூது சொல்வார்கள்.

பழங்குடி குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆமை, நாகர், புலி என சின்னங்கள் இருக்கும். பக்கத்துக்கு குழுவில் இருக்கும் ஒரு ஆணை ஒரு பெண் காதலிப்பாள்.

பொதுவாக ஊரில் பெண்கள் 10,12 வயது வரும்போதே சாவடி போன்ற ஒரு இடத்தில் சென்று தங்குவார்கள். அங்கு வார்டன் போல ஒரு வயதான அல்லது கைம்பெண் ஒருவர் இருப்பார். அவர்தான் சங்க இலக்கியத்தில் வரும் செவிலித்தாய். காதல் விவகாரங்களை அவர்தான் பெற்றோரிடம் சொல்கிறார். என் கண் முன்னால் இவையெல்லாம் நடப்பதைப் பார்த்தபோது எனக்கு தோன்றியது, சங்க இலக்கியத்துக்கு நிகழ்கால சோதனைக் கூடம் ஒன்று இருக்கிறதென்றால் அது ஒடிஷாவும் சத்தீஸ்கரும்தான். இந்த புரிதல் கிடைத்தப்பிறகுதான் நான் இடப்பெயர்களையெல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.”

``சிந்துசமவெளி பற்றிய மரபணு ஆராய்ச்சிகள் என்ன நிலைமையில் இருக்கின்றன...”

``மரபணு ஆராய்ச்சிகள் மிக முக்கியமானவை. ஒரு நாகரிகத்தை ஆராயும் போது அகழாய்வை மட்டுமே வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது, இலக்கியத்தைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வர முடியாது, புவியியலை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது, வரலாற்று புத்தகங்களை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது, மானிடவியலை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வர முடியாது. இவற்றுடன் சோசியாலஜி, ஜெனிடிக்ஸ் ஸ்டடி, மனிதர்களுடைய மரபணு மட்டுமல்லாமல் பழைய விலங்குகள் தாவரங்களின் மரபணுக்களையும் ஆராய வேண்டும்.

மரபணு ஆராய்சிக்காக சிந்து சமவெளியில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு எலும்புக்கூடு மட்டுமேக் கிடைத்தது. உலகம் முழுவதும் இருந்து 95 ஆய்வாளர்கள் கூட்டாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். சிந்துவெளி நாகரிகம் இயங்கிய காலத்தில் சிந்துவெளிக்கு வெளியில் கிடைத்த எலும்புகளை தெற்காசிய மக்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டனர்.

இந்த ஆய்வில் வாகீஸ் நரசிம்மன், டேவிட் ரீச், நூர்ஜனி, வசந்த் ஷிண்டே, தங்கராஜ் ஆகியோர் முக்கியமான நபர்கள். இவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், ஆதி இந்தியர்கள் (AASI) (இதைவைத்துதான் ஏர்லி இந்தியன்ஸ் புத்தகம் எழுதப்பட்டது), தொல் தென்னிந்தியர்கள், தொல் வட இந்தியர்கள் என மூன்று மரபணுக்களை கண்டறிந்தனர்.

Skeleton From Harappa

சிந்து சமவெளியில் வரக்கூடிய ஹரப்பன் மக்கள், தொல் பழங்குடி தென்னிந்திய மக்கள் மற்றும் ஈரானில் இருந்து வந்த வேட்டையாடும் மற்றும் வேளாண்மை செய்யும் மக்கள் இணைந்த மரபணு கொண்டவர்கள். இன்றைய இந்திய ஜனத்தொகையில் 80 விழுக்காடுபேருக்கு சுரண்டிப்பார்த்தால் இந்த மரபணு இருக்கும். இன்றைய தேதிக்கு இனம் குறித்துப் பேசுவதெல்லாம் பொருளற்றது. ஒருவரைப் பார்த்து நீ ஆரியன் அல்லது திராவிடன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

நம் ஆய்வுகளில் ஆரியம் திராவிடம் எனச் சொல்வது எல்லாம் மொழியை வைத்துதான். குருதிக் கலப்பு பலமுறை நடந்துள்ளதால் குருதியை வைத்து சொல்ல முடியாது.

சிந்துசமவெளி குறித்த மரபணு ஆய்வுகள் இறுதியாக நிறுவுவது என்னவென்றால், ஆதி இந்தியர்கள், தொல் தென்னிந்தியர்கள், தொல் வட இந்தியர்கள் தவிர கடைசியாக ஸ்டெபிப் புல்வெளிகளில் இருந்து குடியேறிய மக்கள். சிந்துவெளியில் கிடைத்த எலும்பு ஸ்டெபிப் மக்களுடன் தொடர்புடையது அன்று. அவர்கள் தாமதமாக வந்தவர்கள்.

இந்த ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை. இதில் புதிய திறப்புகள் வரக்கூடும். மரபணு ஆராய்ச்சிகள் முக்கியமானவை என்பதை மட்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

``நமக்குத் தெரிந்த சிந்துவெளி கலாசாரம், இன்று இருக்கக்கூடிய So Called இந்திய கலாசாரத்துடன் எந்த அளவு ஒத்துப்போகிறது?"

``சிந்துவெளியின் முதல் அடையாளமே, அது ஒரு நகர்மய பண்பாடு என்பதுதான். பெரிய நகரம், பெரிய சுவர்கள், அகன்ற வீதிகள், குப்பைத் தொட்டி, பொதுவான குளிப்பிடம், உடை மாற்றும் இடம், வீட்டில் முதல்மாடி இருந்தால் கூட அங்கு கழிப்பறை, அதிலிருந்து குழாய் வழியாக சாக்கடை, அங்கிருந்து பெரிய சாக்கடை, அதிலிருந்து கழிவுகளை வெளியேற்ற வடிகால் வசதி, தானியக் களஞ்சியம் என பிரம்மாண்டமான நகர நாகரிகத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால் அங்கு கோவில் கிடையாது, பெரிய அரசர்களோ பேரரசர்களோ வாழ்ந்ததற்கான எந்த தடயமும் கிடையாது. ஆயுதங்கள் கிடையாது. பெரிய போர்கள் எல்லாம் நிகழாத, பொருள் தேடுவதில் முனைப்புக் காட்டிய ஒரு சமூகம். ஒரு அமைதியான விரிவான பண்பாடு.

Indus Valley Civilization

சிந்துவெளியில் ஒரு பத்து உருவபொம்மை கிடைத்தது என்றால் அதில் எட்டு பெண்களின் உருவபொம்மை. அது கடவுளா என நமக்குத் தெரியாது, சிலர் அது தாய் தெய்வம் என்கின்றனர். அது என்னவாக இருந்தாலும் பெண்களின் இருப்புக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேதகால பண்பாட்டில் எல்லாமும் ஆண் கடவுள்கள்தான். வருணன், இந்திரன், அக்னி என. பெரிதாக பெண் தெய்வங்கள் கிடையாது. ஆனால் நடைமுறையில் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் கிராமங்களில் கிராம தேவதைகள் இருக்கின்றனர். வேதங்களிலும் வட இந்திய இலக்கியங்களிலும் பெண் தெய்வங்கள் இல்லை. ஆனால் சங்க இலக்கியங்களில் கானமர் செல்வி, கடல்கெழு செல்வி என பெண் தெய்வங்கள் பேசப்படுகின்றனர். இந்த தாய் தெய்வ வழிபாட்டை நான் சிந்து சமவெளியின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன்.

ஹரப்பா மக்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கியும் சென்று குடிபெயர்ந்திருக்கின்றனர், தெற்கு நோக்கியும் சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் நமக்கான அடையாளங்களை தக்க வைத்துள்ளோம். தமிழ் போன்ற பழமையான மொழியில் சங்க இலக்கியங்கள் எல்லாம் எழுதி வைக்கப்பட்டதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். மற்றவர்கள், வட இந்தியாவில் தங்கியவர்கள் அவர்களது அடையாளங்களை இழந்துவிட்டனர்."

``நீங்கள் நேரில் சென்று பார்த்த ஒரு அகழாய்வு உங்களுக்கு தெய்வீக உணர்வைத் தந்திருக்கிறதா?"

``நான் என் வாழ்க்கையை விட, என் இருப்பை விட முக்கியமானத் தேடலில் இருக்கிறேன் என எனக்குத் தெரியும். இந்த பெரிய தேடலுக்கு நான் இந்தியா முழுவதும் அலைய வேண்டும். எனக்கு அதற்கேற்ற வேலையும் அமைந்தது.

கீழடியில் அகழாய்வு நடைபெற்று தடயங்கள் கிடைக்கிறது என்ற செய்தி தெரிந்ததுமே ஒடிஷாவில் இருந்து ஓடோடி வந்தேன். அமர்நாத் ராமகிருஷ்ணனைச் சந்தித்து அரைநாள் அங்கு செலவழித்தேன். அகழாய்வு குழிக்குள் இறங்கி ராமகிருஷ்ணன் அனுமதியுடன் அங்கிருந்த பானையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் எனக் கருதுகிறேன். வெளியில் வந்ததுமே அதை என் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினேன். அதற்கு 'கிளியோபட்ரா பானை' எனப் பெயர்கொடுத்தேன்.

கிளியோபாட்ரா பானை

சிந்துவெளிக்கு தமிழ் தொடர்ப்பு இருப்பது உண்மை என்றால் அங்கு ஊர் பெயர்கள் இருக்க வேண்டும் என நினைத்தேன். மக்கள் புலம்பெயரும் போது ஊரை விட்டுச் சென்றாலும் ஊர் பெயரை எடுத்துச் செல்வார்கள். ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய மக்கள் நியூ யார்க், லண்டன், பாரிஸ் போன்ற பெயர்களை அமெரிக்காவில் இருந்த ஊர்களுக்கு வைத்தனர். அப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஈராக்கில் இருந்து புலம்பெயர்ந்த பார்சி மக்களும் தங்கள் ஊர் பெயர்களை வைத்தனர்.

இது எனக்கு நன்றாக தெரியும். அதனால் சிந்து சமவெளியில் தொண்டி, வஞ்சி, கொற்கை என்ற பெயர்கள் இருக்க வேண்டும் என எனக்கு நானே சபதம் எடுத்துக்கொண்டேன். இந்த மூன்று பெயர்களும் சிந்து சமவெளிப்பகுதியில் இருக்கிறது என என் கணினித் திரையில் கண்டுபிடித்த இரவை எனது யுரேகா நொடிகள் என்பேன்."

பூம்புகார் நகரம் : 15,000 ஆண்டுகள் பழைமையானதா - வியப்பூட்டும் தகவல்கள்

(மயிலாடுதுறை பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை வெளிக் கொண்டு வர ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.. இந்திய கடல்சார் பல்கலைக்கழக உதவியுடன், தொல்லியல் துறை சார்பில் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. தம... மேலும் பார்க்க

`ஜமீன்தார், தண்ணீர் வரத்து, திருப்பணி' - வறண்ட பூமியின் கல்வெட்டுக்கள் சொல்லும் வசந்த கால செய்தி

தற்போது வறட்சிநிலையில் இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில், முத்துப்பட்டி தெப்பக்குளத்தின் நீர்வழிப்பாதையில் 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை, முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்... மேலும் பார்க்க