FDFS Review: "விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரம் என்பதால்..." - உயர் நீதிமன்றம் சொல்வதென்ன?
தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் விமர்சனங்கள் குறித்த பேச்சுதான் கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளப் பக்கங்களெங்கும் நிறைந்திருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் அத்திரைப்படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. படம் பார்த்து திரையரங்கத்தைவிட்டு வெளியே வரும் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதை வீடியோ விமர்சனங்களாக யூட்யூப் சானல்கள் வெளியிடுவது வழக்கம். இது போன்ற காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிகப்படியான வரவேற்பு இருக்கும்.
சமீபத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ``இந்த 2024ஆம் ஆண்டில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவற்றை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையைச் சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையைத் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியைத் தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்கத் தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" எனக் கோரியிருந்தனர்.
இப்படியான அறிக்கை வெளியானதும் இணையத்தில் பலரும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ``பல சின்ன திரைப்படங்களின் நிலைமையும் இது போன்ற FDFS விமர்சனத்தால் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அப்படங்களுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தற்கு இந்த விமர்சனங்கள் முக்கியமான பங்கு வகித்திருக்கின்றன'' என ஒரு தரப்பு சினிமா ஆர்வலர்கள் கூறினர்.
மற்றொரு பக்கம், "இது போன்ற விமர்சனங்கள் முழுமையாக ஒரு படத்தின் வெற்றி நிலையைச் சீர்குலைத்துவிடுகிறது. FDFS நடைமுறை இல்லையென்றால் அத்திரைப்படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்கும். சில விமர்சனங்களும் நடிகர்கள் மீது தனிமனித தாக்குதல் நடத்தும் வகையில் இருக்கின்றன" எனவும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து திரைப்பட விமர்சனங்கள் படத்திற்குப் பின்னடைவைக் கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டு படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு சினிமா விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது. மேலும், திரைப்படங்களை விமர்சனம் செய்யும்போது விமர்சகர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்கிட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, "படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனத்தைத் தடை செய்ய முடியாது. விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரம் என்பதால் அதைத் தடை செய்ய முடியாது. அவதூறு பரப்பினால் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்." எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...