Sivakarthikeyan: ``அப்பா ரொம்ப பெருமைபடுவார்..." -அக்கா பற்றி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்கா கௌரி மனோகரியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அரசு மருத்துவரான கௌரி மனோகரி தன்னுடைய 42 வயதில் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன் பெல்லோஷிப்பைப் (RCPF) பெற்றுள்ளார். இதற்காக வாழ்த்திய சிவகார்த்திகேயன், "என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனான அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கையில் குழந்தையுடன் எம்.பி.பி.எஸ் முடித்தது, 38 வயதில் எம்.டி முடித்தது, இப்போது 42 வயதில் RCPF பெற்றது... நீங்கள் எல்லா தடைகளையும் கடந்துள்ளீர்கள். அப்பா நிச்சயம் பெருமைபடுவார். மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் அக்காவின் பக்கம் நிற்பதற்காக மிக்க நன்றி அத்தான்" என ட்வீட் செய்துள்ளார்.
RCPF என்பது இங்கிலாந்து மருத்துவ நிபுணத்துவ ஒழுங்குமுறை அமைப்பான GMC -ன் முதுநிலை தகுதியாகும். பட்டபடிப்பு, நிபுணத்துவம், மருத்துவ சேவை, அனுபவம் மற்றும் பல்வேறு துறைசார் பங்களிப்புகளின் தகுதி அடிப்படையில் RCPF வழங்கப்படுகிறது. RCPF பெற்றவர் இங்கிலாந்தில் மருத்துவ பயிற்சி மேற்கொள்ளலாம்.
கௌரி மனோகரி சின்ன வயதிலிருந்தே படிப்பாளியாக வளர்ந்தவர் என்பதை அவரே கூறியிருக்கிறார். அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்காதபோது அவரது வீட்டில் கடன் வாங்கி எம்.பி.பி.எஸ் சேர்ப்பதாக கூறியும் தான் மெரிட்டில் வருவேன்னு சொல்லி அடுத்தமுறை மெரிட்டில் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளார்.
கௌரியின் கணவர் பிரசன்னா திருச்சியில் பிசினஸ் செய்கிறார். இவர்களுக்கு ராகவ், ஆதவ் என இரண்டு மகன்கள். இவரது படிப்புக்கு சிவகார்த்திக்கேயன் மிகவும் உறுதுணையாக அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார்.
" தம்பி சிவகார்த்திகேயனும் படிக்கச் சொல்லி ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார். சென்னையிலதான் மூணு வருஷம் படிச்சேன். படிச்சுட்டு வரும்போது அம்மா வீட்டு வேலை ஏதாவது செய்யச் சொன்னா, `அது எவ்ளோ தூரம் படிச்சுட்டு வருது... அதைப் போயி வீட்டுல வேலை செய்யச் சொல்றீயேம்மா?’ன்னு அம்மாகிட்ட தம்பி கோபப்படுவாரு. அதைவிட, முக்கியமா என்னைக் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு வீட்டு வேலைக்கு ஆளையும் போட்டார். கார் ஓட்ட டிரைவர் எல்லாம் அனுப்பி வெச்சார். தம்பி மட்டும் என்னை இந்த அளவு கேர் எடுத்து பார்த்துக்கலைன்னா நான் கவனம் செலுத்தி MD Pathology முடிச்சிருக்க முடியாது. முக்கியமா, எம்.டி படிப்புல ஃபர்ஸ்ட் மார்க் வந்ததோடு, கோல்டு மெடலும் வாங்கினேன். " எனப் பேசியிருக்கிறார்.