Karthik Raja Son Yatheeswar raja, "Bhavatharini அத்தை எல்லார்கூடவும் அன்பா இருப்...
Madhampatty Rangaraj: ``நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன்!" - ரங்கராஜ் அறிக்கை!
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இவருக்கு ஷ்ருதி என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், அவரின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்டா தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸ்டில்டா புகார் மனு அளித்து, ``நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில வருடங்களாக திருமணம் முடிக்காமல் ஒன்றாக இருந்தோம்.
அதன்பிறகுதான் எம்.ஆர்.சி நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை.
குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்குப் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னைச் சந்தித்தார். கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்துத் துன்புறுத்தினார்.
நான் முடியாது என மறுத்துவிட்டேன். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதே எனக்குத் தெரியாது. எனக்கு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருடன் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறேன்." எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார் ஜாய் கிரிஸ்டில்டா.
ஜாய் கிரிஸ்டில்டா அனுப்பிய புகாரைத் தொடர்ந்து இன்று நேரில் ஆஜராகச் சொல்லி மாநில மகளிர் ஆணையம் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
அவர், ``நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிஸ்டில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும்.
இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிஸ்டில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.
எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.