Karthik Raja Son Yatheeswar raja, "Bhavatharini அத்தை எல்லார்கூடவும் அன்பா இருப்...
கரூர் சம்பவம்: ''சிபிஐ விசாரணை மூலம் பல உண்மைகள் வெளிவரும்''- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய மீன் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் சிறப்பு யாக பூஜை நடத்திய பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன், ''ராமேஸ்வரத்திற்கு புதிதாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாம்பன் கடலின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் மீனவர்களுக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாசி வளர்ப்பு, இறால் மீன் குஞ்சுகள் வளர்ப்பு, இலங்கை கடற்படையினரின் இடையூறுகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுபட மாற்று தொழிலாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்குதல் என பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன போதும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது பல்வேறு காரணங்களால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுகின்றனர். தற்போது கூட சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்டு தருமாறு என்னிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

திமுக-வை பொறுத்தமட்டில் மக்களின் உயிருடன் விளையாடும் அரசியலை செய்து வருகிறது. பிரதமர் மோடி பிரதமர் ஆனதில் இருந்து 11 லட்சம் கோடி பணம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதியே தரவில்லை என கூறும் திமுக, தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நாட்டிலிருந்து துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பல வருடங்கள் மத்திய அரசில் பவர் புல்லான துறைகளை தங்கள் பொறுப்பில் வைத்திருந்த அவர்கள் கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி மெளமாக இருந்தார்.
கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆனால் திமுக நாடகம் ஆடுகிறது. இன்று கூட சட்டமன்றத்தில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர். விஜய்யின் கரூர் கூட்டம் நடப்பதற்கு முதல் நாளே கூட்டத்தில் ஏதோ நடக்க போகிறது என மக்கள் மத்தியில் பேச்சு இருந்தது. அதன்படியே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.


இந்த துயர சம்பவம் குறித்து சி பி ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி பி ஐ விசாரணையில் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பல உண்மைகள் வெளிவர போகிறது'' என்றார்.
முன்னதாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுத் தருமாறு மீனவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அமைச்சர் முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அமைச்சருடன் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், மாநில நிர்வாகி நாகராஜன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.