``பசங்க 10 கி.மீ ஸ்கூலுக்கு நடக்குறாங்க!, பஸ் வசதியும் இல்ல!'' - சரிகமப தர்ஷினிய...
Parenting: குழந்தைகள் எப்போது பொய் சொல்ல ஆரம்பிக்கும்? - சைக்காலஜிஸ்ட் விளக்கம்..!
'குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு பொய் சொல்லத் தெரியாது' என்பதுதான் பொது விதி. ஆனால், நடிகர் வடிவேலுடன் நடிக்கும் படத்தில் குழந்தைகள் மட்டும் அவரை கன்னாபின்னாவென்று மாட்டிவிடுவதற்காக பொய் சொல்வார்கள். அது ரீல். நிஜத்தில் குழந்தைகள் பொய் சொல்வார்களா; சொல்வார்கள் என்றால் எந்த வயதில் இருந்து சொல்ல ஆரம்பிப்பார்கள்; குழந்தைகளின் எந்த மாதிரி பொய்க்கு பெற்றோர்கள் பயப்பட வேண்டும்; தீர்வு என்ன? சைக்காலஜிஸ்ட் கண்ணன் அவர்களிடம் கேட்டோம்.
''குழந்தைகளும் பொய் சொல்வார்கள். ஆனால், எப்போது தெரியுமா? 'சேட்டை செய்தா அம்மா திட்டுவாங்க' என்பது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தவுடன், பயத்தில் நடந்ததை இல்லையென்று மறுக்க ஆரம்பிப்பார்கள். அதாவது, நடந்த உண்மையை மாற்றிச் சொல்வார்கள்.
நன்கு பேச ஆரம்பித்த 3 முதல் 4 வயதுகளில் வார்த்தைகளைக் கோத்துக் கோத்துப் பேசுகையில் குழம்பிவிடுவார்கள் குழந்தைகள். அந்தக் குழப்பத்தை பெற்றோர்கள் 'குழந்தைப் பொய் சொல்கிறது' என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
இதுவே, 4 முதல் 5 வயதுகளில், 'நான் சாக்லெட் எடுக்கலைம்மா', 'அவந்தான்மா மொதல்ல கிள்ளினான்' என்று அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு உண்மைப்போலவே பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். 'பொடிசு பொய் சொல்லுது' என்று பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரிகிற அளவுக்கு இந்தப் பொய்கள் இருக்கும் என்பதுதான் இதில் சுவாரஸ்யம்.
அடுத்தக்கட்டமாக, 5 முதல் 6 வயதுகளில் அவர்கள் ஆசைப்படுகிற விஷயங்களை கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்வார்கள். உதாரணத்துக்கு, தன்னுடைய கிளாஸ் மிஸ் தன்னைக் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுகிற குழந்தைகள், 'மம்மி இன்னிக்கு என் மிஸ் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினாங்க' என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் மிஸ் இவர்களின் கன்னத்தில் தட்டிப் பாராட்டியிருப்பார் அவ்வளவுதான். இதையும் பொய்யுடன் சேர்க்க முடியாது. அதனால், இதற்குப் பயப்பட தேவையில்லை.
குழந்தைகளைப் பொறுத்தவரை, பெற்றோர்களின் மேல் இருக்கிற பயத்தில்தான் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஒரு குழந்தை தன் அம்மாவின் செல்போனை தெரியாமல் தண்ணீரில் போட்டிருக்கும். குழந்தைக்கு, 'தெரியாமல் போட்டுவிட்டேன்' என்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்லத் தெரியாது. ஆனால், தண்ணீரில் போட்டுவிட்டோம் என்று சொன்னால், அடி விழும் என்பது நன்றாகத் தெரியும். வேறுவழி தெரியாமல் தன் பாதுகாப்புக்குப் பொய்யை தேர்ந்தெடுத்து விடும்.
கொஞ்சம் வளர்ந்தக் குழந்தைகள், 'தண்ணீரில் தெரியாமல் போட்டுவிட்டோம்' என்கிற உண்மையைச் சொன்னாலும் இவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்கிற பெற்றோர்களின் இயல்பு புரிந்ததால் பொய் சொல்வார்கள். செய்தத் தப்பை மறைக்காமல் சொன்னால், திட்டாமல் அதை சரி செய்வார்கள் என்கிற நம்பிக்கை பெற்றோர்களின் மீது இருந்தால், குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். 'நீ உண்மையைச் சொன்னதற்கு நன்றி; இப்படியும் நடக்கும். நோ பிராப்ளம்' என்று சொல்கிற பெற்றோர்களிடம் எந்தக் குழந்தையும் பொய் சொல்லாது.
குழந்தைகள் என்ன, பெரியவர்கள் பேசும் பொய்யைக்கூட முழுமையானத் தவறு என்று சொல்லிவிட முடியாது. ஒரு பிரச்னையை சமாளிப்பதற்காக, ஒருவருடைய மனம் புண்படக்கூடாது என்பதற்காக, சில விஷயங்களை பெரிதுப்படுத்தக்கூடாது என்பதற்காக என்று பொய் சொல்வதற்கான பாசிட்டிவ் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மிருகங்கள்கூட பொய் சொல்லும் தெரியுமா? சிம்பன்ஸிக் குரங்கு, தன்னிடம் இரண்டு வாழைப்பழங்கள் இருந்தால், ஒரு வாழைப்பழத்தை அடுத்த சிம்பன்ஸிக்குத் தெரியாமல் ஒளித்து வைக்கும். இதுவும் பொய்யில் சேர்ந்தது தான். ஆனாலும், தன்னுடைய அடுத்த வேளை பசிக்காகத்தானே அது அப்படிச் செய்கிறது. அதனால், எல்லா பொய்களையும் மிகப்பெரியக் குற்றம் என்று சொல்லிவிட முடியாது.
ஒருவேளை உங்கள் பிள்ளைகள் கால்குலேட்டிவாக பொய்ப்பேசினால், பிற உயிர்களை துன்புறுத்துவிட்டு 'அப்படிச் செய்யவில்லை' என்று பொய்ப்பேசினால், பொய் சொல்வதன் மூலம் பிறருடைய உணர்வுகளுக்கு மரியாதைத் தராமல் இருந்தால், நண்பனின் மேல் இருக்கிற வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக பொய் சொன்னால், பெற்றோர்கள் கண்டிப்பாக கவலைப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் தாண்டி, வீட்டில் யாராவது சகஜமாக பொய்ப் பேசிக்கொண்டிருந்தால்... சின்னச் சின்னத் தவறுக்கெல்லாம் குழந்தை அடி வாங்கிக்கொண்டிருந்தால்... அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சண்டைப்போட்டுக்கொண்டிருந்தால்... குழந்தை மனநிலை பாதித்துபோய் பொய்யென்று தெரியாமலே மாற்றிப் பேசுவது, மறைத்துப் பேசுவது என்று இருப்பார்கள். இதற்கு வீட்டின் சூழ்நிலைகளைத்தான் சரி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பொய் சொல்லாமல் இருப்பதுதான் இயல்பான விஷயம், என்று அதை ஒரு குறையாக சுட்டிக்காட்டாமல் நார்மலுக்குக் கொண்டு வந்துவிடலாம். சரியாகவில்லையென்றால், மன நல ஆலோசகரை சந்திப்பதுதான் தீர்வு'' என்கிறார் சைக்காலஜிஸ்ட் கண்ணன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...