Heart Beat வெப் சீரீஸ் நடிகை 'தீபா பாலு' க்யூட் க்ளிக்ஸ் | Album
Rain Alert: ``இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' - சென்னை வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, 21-ம் தேதி (நாளை) வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.