முதல் 2 வாரம் படத்தை விமர்சிக்கக் கூடாது; FDFS ரிவ்யூவுக்கு நோ; திருப்பூர் சுப்ர...
Siragadikka aasai & Kayal: `ரோகிணி எப்படி சிக்குவார்?' - விரைவில் கயல் கிளைமாக்ஸ்?
சிறகடிக்க ஆசை:
கடந்த வார எபிசோடுகளில் மீனாவின் தம்பி சத்யாவை காப்பாற்ற முத்து ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறார். அதே சமயம் ரோகிணியை ஏமாற்ற சிட்டியும் அந்த பிளாக் மெயில் செய்யும் பி.ஏ-வும் ஒன்றிணைகின்றனர்.
ரோகிணியின் முன்னாள் திருமண வாழ்க்கையைப் பற்றி பி.ஏ சிட்டியிடம் சொல்லிவிடுகிறார். சிட்டி இதைப் பயன்படுத்தி அடுத்தடுத்து பணம் மிரட்டி வாங்க முடிவு செய்கிறார். முதற்கட்டமாக பி.ஏ உயிருக்குப் போராடுவதாக பொய் சொல்லி சிட்டி ரோகிணியிடம் 2 லட்சம் ரூபாய் கேட்கிறார். பணத்துக்காக ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.
முத்து வைத்த வக்கீல் விஜயாவை சந்தித்து பணம் கொடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து 2 லட்சம் கொடுத்து, வழக்கைத் திரும்பப் பெற வைக்கிறார். அந்த 2 லட்சம் ரூபாயை விஜயா தன் தோழி பார்வதியின் வீட்டில் பத்திரமாக வைக்கிறார் விஜயா. இந்த விஷயத்தைப் பார்வதி ரோகிணியிடம் சொல்ல, ரோகிணி நேரம் பார்த்து அங்கு வந்து பணத்தைத் திருடுகிறார்.
முத்து, மீனா, ஸ்ருதி மூவரும் பிசினஸை மேம்படுத்த மீனாவுக்கு உதவி செய்கின்றனர். மீனாவுக்கு மேக் அப் போட்டு ஸ்ருதி போட்டோ ஷூட் செய்கிறார். இப்படியாகக் கடந்த வாரம் கதை நகர்ந்தது.
இனி வரும் வாரத்திற்கான புரோமோவில், மனோஜ் புதிதாகக் கூட்டாண்மை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்தோஷி கால் செய்து, பிசினஸை விரிவுபடுத்த விளம்பரப் படம் உருவாக்க வேண்டும் என்கிறார்.
அதை மனோஜ், முத்து, ரவி, அண்ணாமலை என வீட்டில் இருப்பவர்களை வைத்து எடுக்க வேண்டும் என்கிறார். அதற்காக ஒருவருக்கு 25,000 ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் சந்தோஷி சொல்கிறார். மனோஜ் மகிழ்ச்சியுடன் வீட்டில் இருப்பவர்களிடம் இதை சொல்லி நடிக்க சம்மதம் வாங்குகிறார்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் தந்த விஷயத்தை சொல்லாமல் மறைக்கிறார். ஷூட்டிங் நடக்கும்போது இந்த விவகாரம் குடும்பத்துக்குத் தெரிய வருகிறது. அனைவரும் அவரை ரவுண்டு கட்டுகின்றனர். இந்த வாரம் ரோகிணி சிக்குவார் என்று பார்த்தால் மனோஜ் சிக்கிவிட்டார்.
இனி விஜயாவின் பணம் காணாமல் போன விவகாரம் வெளியே வரும், கண்டிப்பாக பழி மீனா மீது வரும். அதை முத்து எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கயல் :
கயலுக்கு அவரின் பெரியப்பா தர்மலிங்கம் விருந்து வைக்கிறார். எப்போதுமே அவர் கயலுக்கு எதிராக வில்லத்தனம் செய்து வந்த நிலையில், கல்யாணத்தின்போது கணவன் மனைவி இருவரும் மனம் மாறுகின்றனர். இந்நிலையில் கயலை தன் சொந்த மகளாக நினைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் பெரியப்பாவின் மகனோ கயல் மீது இன்னமும் கோவமாக இருக்கிறார்.
மூர்த்தி பணம் வாங்கியதால் பைனான்சியர் பெரிய பிரச்னை செய்ய அதில் இருந்து கயலின் குடும்பத்தை அவரின் பெரியப்பா தர்மலிங்கம் காப்பாற்றுகிறார். இதனால் கயல் நெகிழ்ந்து போய், இனி பெரியப்பாவின் பாசத்தை இழக்கவே கூடாது என்று நினைக்கிறார். கயல், எழலிலுடன் அவரது வீட்டு விருந்துக்குச் செல்ல சம்மதிக்கிறார்.
கயல் பெரியப்பாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருக்கும் நிலையில், அவரின் மகன் சுப்ரமணி அங்கு வந்து கயல் பணத்துக்காக தான் எழிலைக் கல்யாணம் செய்துகொண்டதாகத் தவறாகப் பேசுகிறார். தர்மலிங்கமும் அவரின் மனைவியும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பிரச்னை செய்கிறார் சுப்ரமணி.
கயல் அவரிடம் பாசமாக பேச முயற்சி செய்கிறார். அவர் மனம் மாறினாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரியும். கயலுக்கு எதிராக இருந்த அனைவரும் மனம் மாறிவிட்டனர். சிவசங்கரி மட்டும் தான் வில்லத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அவரும் மனம் மாறிவிட்டால் சீக்கிரமே சீரியல் முடிவுக்கு வரும் என்பது ரசிகர்களின் யூகம். காரணம் சன் டிவியில் புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாக உள்ளன. எனவே சன் டிவியின் முக்கிய சீரியல்களான கயல், சுந்தரி ஆகியவை முடிவுக்கு வரவுள்ளன.