செய்திகள் :

Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் - `சமூக நீதி'யின் முக்கியத்துவமும் தேவையும்!

post image
பிப்ரவரி 20ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் சபையால் உலகம் முழுவதும் 'உலக சமூக நீதி தினம்' கொண்டாடப்படுகிறது.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்குதல், பழங்குடி மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை உறுதியாக பாதுகாத்தல், வறுமையை ஒழிப்பது, மற்றும் வேலையில்லாமல் தவிப்போருக்கு உதவுவது போன்ற இலக்குகளை மையமாக கொண்டு, ஆண்டுதோறும் இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது.

உலகம் முழுவதும் நடைபெறும் சமூக அநீதிகளைக் கருத்தில் கொண்டு, இத்தினத்தில் நீதியை நிலைநாட்ட தேவையான தீர்வுகளிலும், மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. உலக சமூக நீதி தினத்தின் நெறிமுறைகளோடு இணைந்த இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE), சட்டச் சீர்திருத்தங்கள், அடிமட்ட அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை மூலம் சமூக-பொருளாதார இடைவெளிகளைக் குறைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சமூக நீதி தினம்

2007, நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 62 வது அமர்வின்போது நிறுவப்பட்ட இத்தினம், 2009 இல் நடைபெற்ற அமர்வுக்கு பின், ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை காக்க, சமூக நீதி மேம்பாடு இன்றியமையாததாக விளங்குகிறது என்பதை அங்கீகரிக்கவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மேம்பாடு, அடிப்படை சுதந்திரத்தை வழங்குதல் போன்றவற்றை செய்யாமல் சமூகத்தில் நீதியை நிலைநாட்ட இயலாது என்பதையும் இந்நாள் வலியுறுத்துகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வருகிற நிலையில், அரசியலமைப்பு ஆணைகள் மற்றும் கொள்கை வளர்ச்சிகளின் தாக்கம் முற்போக்காக அமைந்துள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, பின்தங்கி இருப்போருக்கு நலன்கள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பு, பல்வேறு விதிகள் மூலம் சமூக நீதி வழங்கி அதிகாரமளிக்க, வலுவான அடித்தளத்தை அமைத்தது.

சமூக நீதி தினம்

'சமூக, பொருளாதார மற்றும் அரசியல்' சமத்துவத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை உறுதி செய்கிறது. மேலும், தனிமனித கண்ணியம் மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது. இது பாகுபாடற்ற நீதி மிகுந்த சமுதாயத்தை அமைக்க அடித்தளமாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாம் பகுதி அடிப்படை உரிமைகளை அனைவரும் பெறுவதை உறுதிசெய்கிறது. மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை, பிரிவு 23 தடை செய்கிறது. இவற்றை மீறுவோர் மீது சட்ட நடைமுறைகள் எடுக்கவும் வழி செய்கிறது. பிரிவு 24 அபாயகரமான தொழில்களில் குழந்தை தொழிலாளர்களை தடை செய்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான உரிமைகளை உறுதி செய்கிறது.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV இல் உள்ள மாநில கொள்கைகள் (DPSP) நிர்வாகத்திற்கு அவசியம் என பிரிவு 37 கூறுகிறது. சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க, மாநிலத்தை வழிநடத்துகிறது பிரிவு 38. சம வாழ்வாதாரம், நியாயமான ஊதியம் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பை பிரிவு 39 உறுதி செய்கிறது. பிரிவு 39A பின்தங்கியவர்களுக்கான இலவச சட்ட உதவிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பிரிவு 46 பாகுபாட்டைத் தடுக்க எஸ்.சி, எஸ்.டி மற்றும் நலிந்த பிரிவினருக்கு சிறந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டை கட்டாயமாக்குகிறது. இவ்வாறு, சமூக நீதியை சமூகத்தில் நிலைநாட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது.

1985-86 ஆம் ஆண்டில், நல அமைச்சகத்தை, உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் பிரிவுகளை உள்ளடக்கிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் நலத்துறை என இரண்டாக பிரித்தனர். பின், மே 1998 இல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஒதுக்கப்பட்ட குழுக்கள் வளர்ச்சி பெற போதுமான ஆதரவு வழங்குகிறது. மேலும், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்வை நடத்தவல்ல சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சமூக நீதியை நிலைநாட்ட இத்துறைகள் சிறந்த பங்களிக்கிறது.

இந்த ஆண்டுக்கான உலக சமூக நீதி நாள், "நிலையான எதிர்காலத்திற்கான நியாயமான மாற்றத்தை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கப்படுகிறது. கிர்கிஸ் குடியரசின் நிரந்தர தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையுடன் (UNDESA) இணைந்து கொண்டாட்டங்கள் அனுசரிக்கப்படுகிறது. சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டிற்கு (WSSD2) உலகம் தயாராகி வரும் நிலையில், இந்நிகழ்வு வரலாற்று சிறப்பைப் பெறுகிறது.

சமூக நீதி தினம்

உலகெங்கும் உள்ள முக்கிய நகரங்களில், ஐந்து நிகழ்வுகளை நடத்தி, இத்தினத்தை அனுசரிக்கவுள்ளது உலக தொழிலாளர் அமைப்பு (ILO). இந்நிகழ்வுகள் சர்வதேச, தேசிய மற்றும் பிராந்திய கொள்கை நிகழ்ச்சி நிரல்களை மையமாக கொண்டு, சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கங்கள் பற்றி விவாதிக்க உலகமெங்கும் உள்ள உயர்மட்ட பேச்சாளர்களை ஒன்றிணைக்க உள்ளது.