Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிடித்தார்.
இது குறித்து சிறை கணக்காளர் முஷார் அகமத்திடம் விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து வங்கிக்கணக்கை முழுமையாக ஆய்வு செய்யும்படி ஆதித்ய குமார் கேட்டுக்கொண்டார். இதில் ரூ.30 லட்சம் அளவுக்கு சிறை நிர்வாகத்திற்குத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருந்தது.
அப்பணம் யாருக்குச் சென்று இருக்கிறது என்பது குறித்து விசாரித்தபோது ராம்ஜித் யாதவ் என்பவரது வங்கிக்கணக்கிற்குச் சென்று இருந்தது.
ராம்ஜித் யாதவ் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் அசாம்கர் மாவட்ட சிறையில் இருந்து வந்தார்.

அவர்தான் சிறையில் இருந்தபோது காசோலையைத் திருடி பணத்தை எடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராம்ஜித் யாதவை போலீஸார் பிடித்துச்சென்று விசாரித்தபோது, சிறையில் இருந்த மற்றொரு கைதி சிவ்சங்கர், சிறை கணக்காளர் முஷார் அகமத் மற்றும் சிறை வாட்ச்மென் குமார் பாண்டே ஆகியோர் இணைந்து இந்த மோசடியைச் செய்திருப்பது தெரிய வந்தது.
ராம்ஜித் யாதவ் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தபோது சிறையில் திருடிய காசோலையைப் பயன்படுத்தி சிறைக்குச் சொந்தமான பணத்தைத் தனது வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
ராம்ஜித் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகும் நாளில் காசோலையைத் திருடியதாக போலீஸ் விசாரணையில் ராம்ஜித் தெரிவித்துள்ளார். ராம்ஜித் மற்ற மூவருடன் சேர்ந்து சிறை அதிகாரி போன்று கையெழுத்து போட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பணத்தை எடுத்துள்ளனர்.
இம்மோசடிக்கு சிறை கணக்காளர் முஷார் அகமத் கூட்டு என்பதால் சிறை வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. மோசடிக்குக் காரணமான நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.