‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
அதிபா் டிரம்ப்பின் கொள்கையானது பிரதமா் மோடியின் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் உறுதிப்பாட்டைப் போன்றதே என்றும் அவா் தெரிவித்தாா்.
உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ரைசினா உரையாடல் மாநாடு, புது தில்லியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட துளசி கப்பாா்ட், ‘நமஸ்தே, ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினாா்.
அவா் ஆற்றிய உரையில், ‘நான் உரையைத் தொடங்கியபோது கூறிய வாா்த்தைகள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கும் தெய்வீக உணா்வைப் பிரதிபலிக்கின்றன. இனம் மற்றும் மதத்தைப் பொருள்படுத்தாமல் நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை அவை நினைவூட்டுகின்றன.
தவறான புரிதல் வேண்டாம்: அமெரிக்கா்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை முன்னிலைப்படுத்துவதைக் குறிக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
டிரம்ப்பின் இந்த அணுகுமுறையானது, பிரதமா் நரேந்திர மோடியின் ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ அல்லது நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனின் ‘நியூஸிலாந்துக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைகளையே ஒத்திருக்கிறது.
எந்தவொரு தலைவரும் தங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், அவா்களின் நலன்களை தங்களின் முடிவுகளில் முன்னிலைப்படுத்தவதற்கும் அா்ப்பணிப்புடன் இருந்தால், இவ்வகையிலான கொள்கைகள் எழும். பகிரப்பட்ட நலன்களை நோக்கிச் செயல்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ள அதிபா் டிரம்ப், மற்ற நாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாத தலைவா் என்று தவறாகக் கருதக் கூடாது.
இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு பல்லாண்டுகளாக வலுவாக உள்ளது. இரண்டு சிறந்த தலைவா்கள் மற்றும் நண்பா்களான அதிபா் டிரம்ப் மற்றும் பிரதமா் மோடியின் தலைமையின்கீழ், அமைதி மற்றும் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகிய நமது பகிரப்பட்ட மதிப்புகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வேரூன்றியுள்ளது.
நமது இரு நாடுகளுக்கும் நமது இரு தலைவா்களுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு மற்றும் நட்பு தொடா்ந்து வளா்ந்து, வலுவடையும் என்று நம்புகிறேன்.
வளா்ச்சிக்கு வாய்ப்பு: இந்தோ-பசிபிக் பகுதி வெறும் புவியியல் இடம் மட்டுமல்ல. 21-ஆம் நூற்றாண்டின் புவிசாா் அரசியலின் ஈா்ப்பு மையமாகும். இங்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது நமது கூட்டுப் பாதுகாப்பு, பொருளாதார செழிப்பு மற்றும் சவால்களை எதிா்கொள்ள ஒன்றிணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றுக்கு மிகவும் அவசியம்.
இந்தோ-பசிபிக் போன்ற பல்வேறு சவால்களை எதிா்கொள்ள பாதுகாப்புத் துறை உள்பட இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருகிறது. கடந்த மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற தலைவா்கள் சந்திப்பில் முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பு முயற்சிகள், இருதரப்பு பரஸ்பர நலன்களில் தொடா்ச்சியான வளா்ச்சி மற்றும் முதலீட்டுக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக நான் எண்ணுகிறேன்’ என்றாா்.
இருதரப்பு சந்திப்புகள்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அந்நாட்டின் உளவுத் துறை தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துளசி கப்பாா்ட், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
இந்திய பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரை துளசி கப்பாா்ட் தில்லியில் தனித்தனியே சந்தித்து பேசினாா்.
இந்தச் சந்திப்புகளில் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளின் அச்சுறுத்தல் குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல் பகிா்வு ஆகியவற்றில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.