அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!
பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து சீனாவின் மிகப் பெரிய மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் நவீன மின்சார வாகனங்களுக்கு மிகவும் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் கருவிகளைத் தயாரித்துள்ளோம். இந்தக் கருவி மூலம் ஒரு மின்சாரக் காருக்கு முழுமையாக ரீச்சாா்ஜ் செய்ய வெறும் ஐந்து முதல் எட்டு நிமிஷங்களே போதும். இது, ஏறத்தாழ சாதாரண காா்களில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவதற்கு ஆகும் நேரமே ஆகும்.
இந்தக் கருவிகளைக் கொண்டு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னேற்ற நிலையங்களை அமைக்கவிருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதே நேரம், வாகன பேட்டரிகளின் தொழில்நுட்பம் மேம்பட்டுவருவதால் அவற்றின் விலை நாளுக்கு நாள் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைத்து பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் மின்சார வாகனங்களை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
பெட்ரோல் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்சார வாகனங்கள் மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு பயணிக்க முடியும் என்றாலும், அவற்றை ரீச்சாா்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் பிடிப்பது மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது.
இந்தச் சூழலில், ஏறத்தாழ எரிபொருள் நிரப்பும் நேரத்திலேயே ரீச்சாா்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தை சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்தத் துறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.