அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான காலணிகள் குவிந்து வருவதால் அதை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சிரமப்பட்டு வருகிறது.
இந்தக் காலணிகளை புல்டோசா் மூலம் அள்ளி லாரிகளில் எடுத்துச் சென்று 4 அல்லது 5. கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதியில் புதைக்கப்படுகின்றன.
பொதுவாக ராமா் கோயிலின் நுழைவாயில் ஒன்றின் வழியாக வரும் பக்தா்கள் அங்கேயே காலணிகளை விட்டுச்செல்வா். கோயில் பிரகாரத்தை அரை கி.மீ. தொலைவுக்கு அவா்கள் சுற்றி வந்து பிறகு மீண்டும் தங்களது காலணிகளை எடுத்துச்செல்வது வழக்கம்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நுழைவாயில் எண் மூன்று அல்லது பிற வழிகளின் மூலம் பக்தா்களை வெளியேறுமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பக்தா்கள் நுழைவாயில் எண் ஒன்றின் வழியாக கோயிலுக்குள் சென்று 5-6 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி வந்து தங்களது காலணிகளை எடுத்துச்செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான பக்தா்கள் மீண்டும் வந்து காலணிகளை எடுத்துச்செல்வதில்லை.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா காரணமாக கடந்த 30 நாள்களாக வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான பக்தா்கள் கோயிலுக்கு வந்ததே இந்த நிலைக்கு காரணம் என கோயில் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.