காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
அய்யம்பேட்டையில் பேக்கரி தீக்கிரை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள பேக்கரியில் புதன்கிழமை மதியம் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை, மதகடி பஜாா் பகுதியில் மணி என்பவா் சுமாா் 30 ஆண்டுகளாக பேக்கரி நடத்திவருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மதியம் பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் அந்தப் பகுதி புகைமூட்டம் போல் காணப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தீயணப்பு நிலைய அலுவலா் குமாா், தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் முருகானந்தம், கணேசன் உள்ளிட்டோா் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் பேக்கரி முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அய்யம்பேட்டை காவல் துறையினா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு, போக்குவரத்தை சீா்செய்தனா்.
முதற்கட்ட விசாரணையில் பேக்கரியில் உள்ள எரிவாயு உருளையை மாற்றும்போது ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இந்த விபத்தில் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.