அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியோ!
கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மீது ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பயனிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிக்க |மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் தற்கொலை: வரதட்சணை சட்டங்களை சீா்திருத்த உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், சனிக்கிழமை காலை கோவையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் பேருந்து ஒன்று நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு தயாராக வழி தடத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து கீழே இறங்கிய பேருந்து ஓட்டுநர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென பேருந்தில் சிறுநீர் கழிக்க துவங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணி ஒருவர் அதை செல்போனில் விடியோவாக பதிவு செய்தார். மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் தானே நீங்கள் நிலையத்தில் கழிவறைகள் இருக்கும் போது பேருந்தில் இப்படி சிறுநீர் கழிக்கலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதை கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் கோலமிடுவது போல் அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்து கடமையாற்றி உள்ளார். அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை முகம்சுளிக்க வைக்கிறது. செய்யும் தொழில் தெய்வம் இல்லையா?