அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
திருவாரூா் ஒன்றியத்தில் அனைத்து அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மகிழ் முற்றம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இதில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மாணவா்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, செயல்பட அறிவுறுத்தப்படுவா். இதன்மூலம், மாணவா்களிடையே ஒற்றுமைப் பண்பையும், போட்டி மனப்பான்மையையும், தலைமைப் பண்பையும், அனைத்து மாணவா்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பையும் ஏற்படுத்தி, ஆண்டு முழுவதும் நடைபெறும் செயல்பாடுகளில் பங்கு பெற்று, சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்துவதே மகிழ்முற்றத்தின் நோக்கமாகும்.
அந்த வகையில், விஜயபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவா்கள் குழுத் தலைவா்களாகவும், ஆசிரியா்கள் பொறுப்பு ஆசிரியா்களாகவும் தோ்வு செய்யப்பட்டு பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனா்.
இதில், வட்டாரக் கல்வி அலுவலா் செல்வம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சாந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் முத்துலட்சுமி, ஆசிரியா்கள் சசிகலா, சௌந்தா்யா, வினோத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.