ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?
அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு
அமராவதி: நாட்டிலேயே அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆந்திரம் முதலிடம் வகிப்பதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார்.
ஆந்திரம் மாநிலம் அமராவதியில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குழந்தைப் பேறு குறித்து புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாட்டிலேயே அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆந்திரம் முதலிடம் வகிக்கிறது என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதல்வர் நாயுடு, தனியார் சுகாதார வசதிகளை கடுமையாக விமரிசனம் செய்ததுடன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் "ஆபத்தானது" மற்றும் தேவையற்ற நடைமுறை என்றார்.
மாநிலத்தில் நடைபெறும் குழந்தை பேறுகளில் 90 சதவீதம் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த எண்ணிக்கையில் தனியார் மருத்துவமனைகள் பெரும் பங்கு வகிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், மருத்துவத் தேவையை விட வசதி அல்லது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ள பலர் விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நேரத்தை நிர்ணயிக்கிறார்கள். இது மிகவும் தவறாகும். பெற்றோருக்கு சாதகமாக அல்லது மூட நம்பிக்கை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் அதிகயளவில் நடைபெறுகின்றன. ஆனால், மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமே தவிர, தேவையில்லாமல் மனித உடலை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக இயற்கையாக குழந்தேப் பேறு நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கும்போது அறுவை சிகிச்சை எதற்கு என்றவர், மாநிலத்தின் சுகாதாரத் திட்டமான டாக்டர் என்டிஆர் வைத்திய சேவா அறக்கட்டளையின் கணிசமான நிதி குழந்தைபேறு அறுவை சிகிச்சைகளுக்கு செலவிடப்படுவதாகவும், இதனால் பொது நிதி வீணாகிறது என தெரிவித்தார்.
இந்த பிரச்னையை சுகாதார அமைச்சர் ஒய். சத்ய குமார் யாதவ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுவதை உறுதிசெய்யவும், இயற்கையான பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாயுடு வலியுறுத்தினார்.