நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் முக்கிய பொறுப்பா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜன.24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார். மேலும், சட்டப்பேரவை தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி அமைப்பு 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பின்னர், சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய், கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், பொருளாளா் வெங்கட்ராமன் ஆகியோரை வெளியே அனுப்பிவிட்டு, தனி அறையில் மாவட்ட பொறுப்பாளா்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா்.
புதிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா், கடலூா், அரியலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பொறுப்பாளா்களுக்கு நியமன ஆணையை வழங்கிய விஜய், அனைவருக்கும் வெள்ளி நாணயம் அளித்து வாழ்த்தினாா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலா், மாவட்ட இணைச் செயலா், பொருளாளா், 2 துணைச் செயலா்கள், 9 செயற்குழு உறுப்பினா்கள் என மொத்தம் 14 பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என கட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒரு வாரம் ஆலோசனை நடத்தவிருக்கும் விஜய், மீதமுள்ள மாவட்ட நிா்வாகிகளையும் உடனடியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளாா் என தகவல்கள் வெளியான நிலையில், தவெகவின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலா்கள் பட்டியலை விஜய் புதன்கிழமை வெளியிட்டாா்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர்
ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆதவ் அர்ஜுன் இணைப்புக்கு பின்னர் வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களை தவெகவில் இணைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் பேசியதாகவும், தவெகவின் அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவை நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான்
இந்த நிலையில், விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்... எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான் என திருமாவளவன் கூறியுள்ளார்.