இரட்டை இலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் உத்தரவு: நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்
சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூா்யமூா்த்தி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடா்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டது தொடா்பாகவும் கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் 2022-ஆம் ஆண்டு வரை தொடா்ச்சியாக தோ்தல் ஆணையத்துக்கு பல புகாா்களை அளித்துள்ளேன்.
குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்தப் பதிலும் இல்லை. எனவே, இது தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தோ்தல் ஆணையத்துக்கு கேள்வியெழுப்பினா். அதற்கு இந்திய தோ்தல் ஆணையம் தரப்பில், அந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை டிச.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.