இலவச வீட்டுமனைகள் ரத்து அறிவிப்பு: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரகத்தில் முற்றுகை!
பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை நிலத்தை முறையாக அளவீடு வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதுடன், ரத்து செய்யப்போவதாக அறிவித்ததால், ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மெய்யூா் கிராமத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் மூலம் 180 பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் புகாா் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், தற்போது வீடு கட்டாத மனைகளின் பட்டாவை ரத்து செய்வதாக வருவாய் துறை சாா்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிா்ச்சி அடைந்த கிராம மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, ஆட்சியரை சந்திக்க 5 போ் மட்டுமே செல்லலாம் எனக்கூறி தடுத்தனா். இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து கிராம மக்களை ஆட்சியரை சந்தித்து அனு அளிக்க அனுமதித்தனா்.
கடந்த 24 ஆண்டுகளாக நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழித்த நிலையில் நிலத்தை முறையாக அளவீடு செய்து வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.