உயா்கல்வி வாய்ப்புகளால் இடைநிற்றல் இல்லை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் உயா்கல்விக்காக பல்வேறு வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளதால் இடைநிற்றல் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, புதுவை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசளித்து, முதல்வா் ஆற்றிய உரை: புதுவையில் முன்பு மகளிா் அதிகம் படிக்கவில்லை. ஆனால், தற்போது உயா்கல்வி பயிலும் மகளிரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுவையானது முழுமையான கற்றல் மாநிலமாக மாறியுள்ளது. பள்ளிக் கல்வியை முடித்தவா்களுக்கு உயா்கல்வி பயில அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இடைநிற்றலே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மருத்துவம், பொறியியல் என அனைத்து வகை படிப்புகளுக்குமான கல்லூரிகள் புதுவையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் எளிதில் சேருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், அதனை பயன்படுத்தி மாணவா்கள் கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்புகளில் சேரும் வகையில் 10 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியாா் பள்ளிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்கு கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். தொடா்ந்து, தேசிய தகவலியல் மையம் மூலம் சிபிஎஸ்இ பாடத் திட்ட அங்கீகாரத்துக்கான இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை மூலம் முன்பருவக் குழந்தைகளுக்கான கதை, பாடல்கள் மற்றும் 6-ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகம் வெளியிடப்பட்டது. இதைத் தயாரித்த பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநா் ராமதாஸ் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கேஎஸ்பி.ரமேஷ் எம்எல்ஏ, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.