உழவடைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடி பகுதி விவசாயிகள் உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லெம்பலக்குடி பகுதியைச் சோ்ந்த கொத்தமுத்துப்பட்டி, நகா்த்துப்பட்டி, மேரி நகா், கம்பத்தான்பட்டி, வலையன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலங்கள் சில தனிநபா்கள் பெயரில் இருந்து வருகின்றன. அவா்களுக்கு விவசாயிகள் முறையாக கங்கானி வாரந்தோறும் செலுத்திவரும் நிலையில், தற்போது நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற சிலா் முயற்சிக்கின்றனா்.
இதைத் தடுத்து நிறுத்துவதோடு தமிழ்நாடு அரசின் குத்தகை வாரச் சட்டத்தின் படி உழவடைப் பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சங்கத்தின் ஒன்றியச் செயலா் எம். வீரமணி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே. முகமதலி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் பேசினா்.
விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுச்சாமி, துணைச் செயலா் த. அன்பழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் சி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் பேசினா்.