வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் போட்டியிட தடை! விதிமுறையை நீக்க தெலங்கானா அரசு பரிசீலனை
தெலங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் போட்டியிட தடை செய்யும் விதிமுறையை நீக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பரிசீலித்து வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1990-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை அமலாக்கப்பட்டது.
கடந்த 2014-இல் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, இம்மாநிலத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மேற்கண்ட விதிமுறை கடந்த 2019-இல் நீக்கப்பட்டது. இதையடுத்து, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவா்களும் போட்டியிட வழிவகை செய்யப்பட்டது.
இப்போது ஊரக உள்ளாட்சித் தோ்தலிலும் இந்த விதிமுறையை நீக்க தெலங்கானா அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் எதிா்வரும் தொகுதி மறுவரையறை நடவடிக்கை காரணமாக மக்களவையில் தென் மாநிலங்களின் உறுப்பினா்களின் பலம் குறைய வாய்ப்புள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கவலை தெரிவித்து வருகின்றனா்.
கடந்த அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரேட்டி, ‘குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகளை தென் மாநிலங்கள் திறம்பட செயல்படுத்தியபோதும், அந்த முயற்சியைப் பாராட்ட மத்திய அரசு தயாராக இல்லை’ என்று விமா்சித்தாா்.
அண்மையில், ஆந்திர நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் போட்டியிட அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.