Zubeen Garg: ``அவர் செய்ய விரும்பியவற்றை நான் செய்வேன்" - மறைந்த ஜுபின் கார்க் க...
எச்-1பி விசா: ஆந்திரத்தில் புதிய வளாகம் திறக்கும் அஸென்ஜர்! 12,000 பேருக்கு வேலை
ஆந்திர மாநிலத்தில், சுமார் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய வளாகத்தைத் திறக்க அஸென்ஜர் நிறுவனம், மாநில அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த, எச்-1பி விசா பெற (நுழைவுஇசைவு) கட்டணம் ரூ.88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயர்த்தப்பட்டு, செப்.21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அஸென்ஜர் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.
விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அதனால் அதிகம் பயனடைந்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
துறைமுக நகரமான விசாகப்பட்டினம் அருகே 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை இதற்காக ஒதுக்குமாறு ஆந்திர அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த கோரிக்கை உடனடியாக ஒப்புதல் வழஙகப்பட்டு, அனுமதிக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அஸென்ஜர் நிறுவனத்தில் மொத்தமுள்ள 7,90,000 ஊழியர்களில் இந்தியர்கள் மட்டும் 3 லட்சம் பேர். சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பகுதியை இந்தியா கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், இந்த புதிய வளாகத்தைத் தொடங்க நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இதுபோலவே, டாடா கன்சல்டன்சி, காக்னிசென்ட் போன்றவையும் இந்தியாவில் புதிய அலுவலகங்கள் திறக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆந்திர அரசு, பெரிய நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை 0.99 பைசாவுக்கு குத்தகைக்கு விடுவது என்ற கொள்கை அறிவிப்பால் பல முன்னணி நிறுவனங்கள் ஆந்திரத்தை நாடத் தொடங்கியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.