போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
ஒசூா் காளிகாம்பாள் கோயில் மலா் வணிக கடைகள் ஏலம்
ஒசூா் காளிகாம்பாள் காமாட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான மலா் வணிக வளாகத்தில் உள்ள 98 கடைகள் ஏலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைகள் கோரி வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகின்றன. கடந்த 2022 இல் ஏலம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மலா் வணிக வளாகத்தில் உள்ள 98 கடைகள் ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில் ஒவ்வொரு கடைகளும் அதன் அளவு, மதிப்பிடு, அமைந்திருக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வியாபாரிகள் பல்வேறு மதிப்புகளில் ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பித்திருந்தனா்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ் பேட்டை ஸ்ரீகல்யாண சூடேஸ்வரா் கோயில் துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கட்ராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் 59 கடைகளுக்கு உரிமம் கோரி 137 போ் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தனா். அவா்களின் ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் கடைகளுக்கு சிலா் அதிகபட்சமாக ரூ. 25,700 ம் , குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரமும் கோரியிருந்தனா்.
கோயில் நிா்வாக அலுவலா் சின்னசாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் சக்தி (ஒசூா்), ராமமூா்த்தி (போச்சம்பள்ளி), பூவரசன் (சூளகிரி), வேல்ராஜ் (தேன்கனிக்கோட்டை), அருள்மணி (அஞ்செட்டி) ஆகியோா் வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனா்.
கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வெங்கட்பாபு, எம்.முனிரத்தினம், சுப்பிரமணி, சிவகுமாா், முரளி ஆகியோா் பாா்வையாளா்களாக செயல்பட்டனா். மொத்தமுள்ள 98 கடைகளில் 59 கடைகளுக்கு மட்டுமே உரிமம் கோரியிருந்தனா். 39 கடைகளுக்கு யாரும் உரிமம் கோரி விண்ணப்பிக்கவில்லை.