ஓராண்டில் 28 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 28 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 16 சதவீதம் குறைந்து, 2024-ஆம் ஆண்டு 31 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களைப் பொருத்தமட்டில், 2023-ஆம் ஆண்டு 19 வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 5 வழக்குகள் மட்டும் பதிவாகின.
2023-ஆம் ஆண்டு 67 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின. இதில் 37 சதவீதம் குறைந்து 2024-ஆம் ஆண்டு 42 வழக்குககள் மட்டும் பதிவாகின. 2023-
இல் 73 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-ஆம் ஆண்டு 86 சதவீதம் குறைந்து 10 வழக்குகளே பதிவாகின.
திருட்டு வழக்குகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 15 சதவீதம் குறைவாகவும், வாகன விபத்துகளைப் பொருத்தமட்டில் 2023-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 6 சதவீதம் குறைவாகவும் 2024-ம் ஆண்டு வழக்குகள் பதிவாகின.
2024-ஆம் ஆண்டில் கூட்டுக் கொள்ளை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
2024-ஆம் ஆண்டு மொத்தம் 28 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 75 சதவீதம் அதிகம்.
சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள்: 2024-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் எவ்வித ஜாதிய மோதல்களும் நடைபெறவில்லை.
மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 141 சதவீதம் அதிகம்.
2024-இல் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2023- ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட 43 சதவீதம் அதிகமாகும்.
2024-ஆம் ஆண்டு, தடைசெய்யப்பட்ட 3,381 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.