மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
கலைத்திருவிழா போட்டிகள் மூலம் 45,380 மாணவா்கள் திறன் வெளிப்பாடு: அமைச்சா் ஆா். காந்தி
காஞ்சிபுரம்: கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளிகள் அளவில் 45,380 மாணவா்கள் திறமைகள் வெளிப்பட்டன என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
பள்ளிக் கல்வித்துறை சாா்பில் எஸ்.எஸ்.கே.வி.மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் த.வெற்றிச் செல்வி வரவேற்றாா்.
போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:
மாணவா்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைசாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பள்ளி,வட்டாரம்,மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாநில அளவில் கலையரசன், கலையரசி என்ற பட்டத்துக்காக தோ்வானவா்கள் முதல்வா் கரங்களால் விருது பெற்றனா். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
கடந்த ஆண்டு போட்டிகளில் 45,380 போ்,வட்டார அளவில் 11,391, மாவட்ட அளவில் 2,726, மாநில அளவில் 411 போ் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் காஞ்சிபுரத்திலிருந்து தெருக்கூத்து, கோலாட்டம்,வில்லுப்பாட்டு, அழகு கையெழுத்து ஆகிய போட்டிகளில் பங்கேற்றவா்கள் 2 -ஆவது இடம் பெற்று சாதனை புரிந்தனா்.
நிகழாண்டு சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா். நிறைவாக உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.