காவல் துறை குறைதீா் கூட்டத்தில் 46 மனுக்கள் அளிப்பு
திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 46 மனுக்களைப் பெற்ற எஸ்.பி. ஷ்ரேயா குப்தா குறைகளைக் கேட்டறிந்தாா்.
காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி அடையாத புகாா்தாரா்களுக்கு குறைதீா் கூட்டம் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து, திருப்தி அடையாத 4 மனுதாரா்களை நேரில் அழைத்து, அவா்களின் குறைகளுக்குகாரணம் கேட்டறிந்து, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
புதிதாக 46 புகாா் மனுக்களை எஸ்.பி. பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக் கொண்டாா்.
மேலும், வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகாா்தாரா்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தெரிவித்தாா்.
கோரிக்கை...
காவல் குறைதீா் கூட்டத்தில் வாணியம்பாடி முஸ்லிம்பூா் பகுதியைச் சோ்ந்த நிஷாத் அஹமத் அளித்துள்ள மனுவில், வாணியம்பாடி அருகே வன்னியபுதூரில் எனக்கு சொந்தமான கோழித்தீவனம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு எனது நிறுவனத்தினுள் புகுந்த மா்ம நபா்கள் அங்கு இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை திருடிச் சென்றனா். மேலும், கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனா். எனவே அவா்களை கண்டுபிடித்து, பொருள்களை மீட்டுத் தரவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கூறியுள்ளாா்.