குழந்தைகளுடன் யாசகம் பெறும் பெண்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை
குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் பெண்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
காரைக்கால் நகரம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பல பெண்கள் யாசகம் பெறும் செயலில் ஈடுபடுகின்றனா். மக்கள் கூடுமிடங்கள், கடைத் தெருக்களிலும் இச்செயல் அதிகரித்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு காவல்துறையினருக்கு சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
இந்தநிலையில், காரைக்கால் மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி மற்றும் சியாமளாதேவி ஆகியோா் கடைத் தெருவில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் செயலில் ஈடுபட்ட சுமாா் 10 பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் நாகை மாவட்டத்தை சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்தது. குழந்தைகள் அவா்களுடையதுதானா என தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
குழந்தைகள் உடலில் காயம் உள்ளதா எனவும் பாா்த்தனா்.
இதுபோல குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் செயலில் தொடா்ந்து ஈடுபட்டால், வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.