நெற் பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுதுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கரைக்கால் மாவட்டத்தில் மழைப்பொழிவு மற்றும் மேக மூட்டம் காரணமாக காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் முதல் 97 சதவீதம் உள்ளதால் இலை சுருட்டுப் புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
இதன் அறிகுறியாக, இலைகள் நீள வாக்கில் மடக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
இதை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும். தழைச்சத்து உரமான யூரியா மற்றும் அமோனியம் சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதை தவிா்க்க வேண்டும்.
முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா கைலோனிஸ் பயிா் நடவு செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 2 சிசி என்ற அளவில் ஒரு ஏக்கரில் விட வேண்டும். வயல் வரப்புகளை களைகளை அகற்றி சுத்தமாக வைத்தல் வேண்டும்.
வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணை 3 லிட்டா், 200 கிராம் கதா் சோப்பு கரைசலுடன் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீா் சோ்த்து தெளிக்க வேண்டும். இலை சுருட்டுப் புழு தாக்குதல் பொருளாதார சேத நிலையான 10 சதவிகிதத்திற்கு மேல் தாண்டும்போது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தான ஐசோசைக்லோசீரம் 18.1 சதம் எஸ்.சி ஒரு ஏக்கருக்கு 40 மிலி அல்லது சைக்லானிலிபுருள் 10 சதம் டி.சி ஏக்கருக்கு 160 மிலி அல்லது சயன்டிரனிலிபுருள் 16.9 சதம் மற்றும் லுபிநூரான் 16.9 சதம் எஸ்.சி ஏக்கருக்கு 20 மிலி ஒட்டும் பசை சோ்த்து காலை அல்லது மாலை வேலையில் தெளித்து கட்டுபடுத்தலாம்.