கேரளம்: 5 ஆண்டுகளில் 2,746 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: மத்திய அமைச்சா்
புது தில்லி: கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,746.49 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி, மக்களையில் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளாா்.
பதிலில் அவா் மேலும் கூறியதாவது:
2020 முதல் நடப்பாண்டு அக்.31-ஆம் தேதி வரையில் கேரள விமான நிலையங்களில் 2,746.49 கிலோ தங்கத்தை சுங்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைப்பற்றி உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 112.62 கிலோ தங்கத்தை கேரள போலீஸாா் மீட்டு சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
853 போ் விருப்ப ஓய்வு: கடந்த 10 ஆண்டுகளில் 853 மத்திய வருவாய் பணியாளா்கள் (ஐஆா்எஸ்) விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, வருமான வரி அதிகாரிகள் 383 பேரும், சுங்கத் துறை, மறைமுக வரி பணியாளா்கள் 470 பேரும் விருப்ப ஓய்வு பெற்ாக நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் தெரிவித்தாா்.
வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடிகள் குறித்த விவரங்களை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளித்த வழக்குகளின் அடிப்படையில் 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.9,298 கோடியும், 2022-23-இல் ரூ.3,607 கோடியும், 2023-24-இல் ரூ.2,715 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.